கற்காலம் முதற்கொண்டு தற்காலம் வரை உலகில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இருபத்தோராம் நூற்றாண்டின் விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியினால் மனிதன் அபரிமிதமான சாதனைகளை படைத்து வருகிறான். அதனால் மரபார்ந்த விடயங்கள் மறைந்து நவீனங்களில் நாம் மிதந்து கொண்டு இருக்கிறோம். இதனாலேதான் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என நன்னூலார் குறிப்பிடுகிறார்.
இதற்கிணங்க இன்றைய உலகின் பொருளாதார வளர்ச்சியில் பேசுபொருளாக மாறியிருப்பது மெய்நிகர் பணம் (Cryptocurrency) ஆகும். பண்ட மாற்றில் தொடங்கிய பொருளாதர தொடர்பு இன்று மெய்நிகர் பணமாக மாறி நிற்கிறது. எனவே நாமும் இது பற்றி அறிந்திருப்பது காலத்தின் தேவையே. இந்த மெய்நிகர் பணத்தை கணனிக் காசு (Computer money), நுண்காசு (Micro money), எண்ணிம நாணயம் (Micro money), இணையக் காசு (Virtual money), மின்னணு பணம், எண்ம நாணயம், குறியீட்டு நாணயம், டிஜிட்டல் காசு, கிரிப்டோ நாணயம் எனும் பல பெயர்களை கொண்டு அழைக்கிறார்கள்.
பொதுவாக நாம் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்கும்போது, அதற்கான பணத்தை நம் கையில் இருக்கும் ரூபாய் தாள்களாக கொடுப்போம். மெய்நிகர் பணமும் அதே போல தான். இதனை பயன்படுத்தி ஒரு பொருளையோ, சேவையையோ வாங்க முடியும். ஆனால் அவை தொட்டு பார்க்க முடியாத எண்ணிம நாணய வடிவில் இருக்கும். ஒரு நாட்டின் நாணயத்தாள் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கது ஆகும். ஆனால் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் செல்லத்தக்கது ஆகும். ஒவ்வொரு நாட்டின் பணத்தையும் அந்த நாட்டின் மத்திய வங்கி கட்டுப்படுத்துகிறது. ஆனால் மெய்நிகர் நாணயத்தை எந்த ஒரு வங்கியோ, நாடோ கட்டுப்படுத்த முடியாது. ஒரு இணைய இணைப்பு இருந்தாலே மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
இந்த மெய்நிகர் நாணயங்கள் வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை இல்லாமல் எண்ணிம முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியில் சேமித்து வைக்கப்படுகின்றன. எண்ணிம பணப்பையில் உள்ள நாணயங்களை மற்றொருவருக்கு அனுப்ப குறிச்சொல் (Code) கொடுக்கப்பட வேண்டும். பணப்பையில் மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க முகவரியை அனுப்ப வேண்டும். ஒருவேளை நாம் குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.
2009 ஆம் ஆண்டு தான் முதல் மெய்நிகர் நாணயமான பிட்கொயின் (Bitcoin) உருவாக்கப்பட்டது. பிறகு ஈத்திரியம் (Ethereum), லைட் கொயின் (LiteCoin), டாக் கொயின் (DogeCoin), FTX Token போன்ற ஆயிரக்கணக்கான மெய்நிகர் நாணயங்கள் வந்தன. இன்றைய நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணயங்கள் உள்ளன. அவ்வாறு பயன்படுத்தப்படும் மெய்நிகர் நாணயங்களுக்கு சர்வதேச குறியீடுகளும் காணப்படுகின்றன. எனவே அவற்றுள் மிக முக்கியமான மெய்நிகர் நாணயங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் நாம் அறிந்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
எனவே அவற்றுள்
1. பிட்காயின் - BTC 2. ஈத்தரீயம் - ETH
3. ரிப்பிள் - XRP 4. பிட்காயின் கேஷ் - BCH
5. ஈஓஎஸ் - EOS 6. ஸ்டெல்லர் - XLM
7. லைட்காயின் - LTC 8. கார்டோனா - ADA
9. டீதர் - USDT 10. மோனீரா - XMR
மெய்நிகர் நாணயங்களில் முதன்மையான பிட்காயின் (Bitcoin) (எண்ணிம நாணயக் குறியீடு: BTC - ฿) அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோ எனும் புனைப்பெயரைக் கொண்ட அறியப்படாத ஒருவரால் உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் (open-source software) இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு (அல்லது கட்டச்சங்கிலி - blockchain) என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.
கட்டச்சங்கிலி (blockchain - பிளாக்செயின்) அல்லது தொடரேடு என்பது பல ஏடுகளால் அல்லது கட்டங்களால் ஆனது. தகவல்கள் ஒவ்வொரு ஏட்டிலும் (கட்டத்திலும்) எழுதப்பட்டு, அவை சங்கிலிபோல இணைக்கப் பட்டிருக்கும். சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம், போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். ஏதாவதொரு தகவலை அழிப்பதோ, அல்லது மாற்றுவதோ இதில் கடினமானது. ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் கணுக்கள் (network nodes) மூலமாகவும், பராமரிப்பாளர்கள் வாயிலாகவும் சரிபார்க்கப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம் தருகிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம் சென்றுவிடும். இதனை கணுக்களும், பராமரிப்பாளர்களும் உறுதி செய்வார்கள். இடம் யாருக்கு சொந்தம், எப்போது பரிமாற்றம் நடந்தது, போன்றவற்றை அதிநவீன கணினி மூலமாக, கணித கோட்பாடுகளையும், சமன்பாடுகளையும் சமாளித்து விடையாக அந்த உறுதி அமையும். இவ்வாறு பரிமாற்றம் உறுதிசெய்த பின், மறுமுறை அதே இடத்தை வேறொருவருக்குக் கொடுக்க இயலாது.
பிட்காயினை (பொது வழக்கில் உள்ள டாலர், ரூபாய் போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மத்திய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப்படுவது இல்லை கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி (blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. இது இணையர் வலையம் ( P2P network) என்ற கணினி வலையத்தில் (computer network) செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும்.
கட்டச்சங்கிலியில் உள்ள கட்டங்களை உருவாக்க சுரங்கமர்கள் ((miners) என்பவர்கள் அமர்த்தப் படுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தை உருவாக்க கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப் பட்டது. அந்த பிட்காயினை வைத்துக் கொண்டு, டாலர், ரூபாய், போன்ற பணத்தை வாங்கலாம்; மற்ற பொருட்களையும் வாங்கலாம். பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge, இங்கிலாந்து) மேற்கொண்ட ஆய்வின் படி, 2017 இல் 2.9 மில்லியன் முதல் 5.8 மில்லியன் வரையிலான குறியீட்டு நாணயப் பணப்பைகள் (cryptocurrency wallet) பயன்படுத்தப் பட்டன என்றும், அவற்றில் பெரும்பான்மையானவை பிட்காயினைப் பயன்படுத்தியவை என்றும் தெரிய வந்தது.
பிட்காயினால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிட்காயினை வைத்து நடத்தப் படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் பிட்காயின் களவுகள் ஆகியன பிட்காயினுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும். மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது. ஒரு பொருளின் உண்மை விலையை விட அதிகமான விலையை ஏற்றி மதிப்பிடுவதையே பொருளாதார குமிழ் என அழைக்கப்படுகிறது. இருந்தாலும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் அதனை அமெரிக்க அரசு எண்மான தங்கம் ( Digital Gold) என அறிவித்து அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவென பிட்காயின்களை சேமிக்கத்தொடங்கி இருப்பதும் உண்மையான ஒன்றாகும். மெய்நிகர்நாணயத்தை (cryptocurrency ) சர்வதேச அரசுகள் அங்கீகரித்து வரும் வரிசையில் இலஙங்கையும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே பூமிப்பந்தில் அனுதினமும் புத்தம் புது விடயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுள் எவை சிறந்தவை?, எவை நமது வாழ்விற்கு உகந்தவை?, எவை தீயவை?, எவை அபாயகரமானவை? என கண்டறிந்து அன்னம் போல அனுகூலங்களை அனுபவிப்போம், பிரதிகூலங்களை புறமொதுக்குவோம்.