குரங்கோடி குலையுலுப்ப
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
கன்றோடி காலிடறி கதறுகையில்
கலங்கியழுகிறது நெஞ்சம்
கூரையேறி மயிலாடுகையில்
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
கோழிக் குஞ்சோடி குழியில் வீழ்கையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்
சிறுபட்சி சிறகடித்து நீராடிப் பறக்கையிலே
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
வாத்தோடி வலையில் சிக்கி வதைபடுகையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்
காற்றசைவில் விளாங்கனி வீழ்கையில்
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
காற்றசைவில் குருவிக் கூடுடைகையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்
முயலோடிப் புதரில் புகயிலே
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
புதரிருந்து புடையனோடி வருகையிலே
கலங்கி அழுகிறது நெஞ்சம்
பூவாடி பனி வடிகையில்
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
வெயில் கூடி பூவாடுகையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்
No comments:
Post a Comment