அலகிலா அருளாளன்
அவனல்லோ திருமறைதனை
கற்பித்தான் - மானுடனை
அவனேதான் சிரஷ்டித்தான்
விளக்கமதை விளக்கித்தான்
மனிதனுக்கு அறிவித்தான்
நிலவும் ஞாயிறும்
நீந்தத்தான் எல்லை நிர்ணயித்தான்
தருவும் உடுவும் அவனை
தலைவணங்கத்தான் பணித்தான்
வானத்தை உயரத்திலமைத்தான்
நீதிக்காய் தராசைச்சரிநிகராய் வைத்தான்
நிறுவையில் நீதிதவறாது நீங்களிருக்க
ஏகன் தராசை சமைத்தான்
நிறுத்தால் குறைத்தன்றி நிறைத்தே
கொடுத்திடுங்கள் என்றே பணித்தான்
உயிர்களுக்கென நிலத்தை விரித்தான்
கனிகளையும் பாளைதள்ளும்
பேரீத்தையும் கொடுத்தான்
கோதுமூடிய தானியமும் கூடவே
பயிர்களில் பரிமளத்தையும் பொதித்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
தட்டச் சத்தமெழும்
சுட்ட களியால்
மானுடனையவன் படைத்தான்
தீயின் கொழுந்தால் இன்னும்
ஜின்னையவன் படைத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
கிழக்கிரண்டும் மேற்கிரண்டும்
அவனுக்கென எடுத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
கடலிரண்டை ஒன்றோடொன்று
தொடுத்தான் - ஆனாலுமவை
இணையாது திரைகொண்டு தடுத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
ஆழிக்கடலில் அழகுக்காய்
முத்தும் பவளமும் தோன்ற விதித்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
நகரும் வரைகளாய் சாகரத்தில்
நகரும் நாவாய்களையும் தனக்கென
நாயனவன் எடுத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
உலகோரை ஒட்டுமொத்தமாய்
அழிப்பான் - அன்று கண்ணியமும்
அசுரவாற்றலும் கொண்ட
ஈசனவன் நிலைப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
ஆகாயம் பூமி
அதிலிரண்டிலுமுள்ளோர்
அவனையே இறைஞ்சுவர்
அவனே காரியத்தில்
அனுதினமும் இருப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
உங்களிருவர் கணக்கையும் பார்க்க
விரைந்து அவகாசம் எடுப்பானவன்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
மனித ஜின் வர்க்கமே!
முடிந்தால் பிரபஞ்ச எல்லைதனை
கடந்து பாரும் அவனதிகாரமன்றி
கடப்பதையவன் தடுத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
நாதியற்று நரகில் நீங்களிருக்க
நெருப்பும் புகையும் அதன்னாக்கும்
உங்கள்மேல் சேர்ப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
நாளை மறுமை வரும்போது
வானைச் செந்நிறத்தில் நெய்
போலாகும்படி பிளப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
மனித ஜின்களிடம் நாளை
மறுமையில் தங்கள் பாபம்பற்றி
கேள்வியேதும் கேட்டிடமாட்டான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
முகச்சாடையிலே குற்றவாளிகள்
அறியப்படுவர் - கால்களிலும்
முன்னெற்றி மயிர்களிலும் பிடித்து
எறியப்படுவர்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
நீங்கள் பொய்யாக்கிய நரகம்
இதுவென்று குற்றவாளிகளிடம்
சொல்லுவிப்பான்
செந்தீக்கும் வெந்நீருக்குமிடையே
அவர்களை அலைய வைப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
மறுமைதனை நினைத்து
இறைவனை பயந்தவனுக்கு
சுவனமிரண்டை பரிசளிப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சுவனமிரண்டிலும் கவைத்து
கிளைத்த மரங்களை முளைப்பிப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சுவனமிரண்டிலும்
ஓடுமிரண்டு ஊற்றமைப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சுவனமிரண்டிலும்
கனிகளொவ்வன்றிலும்
இருவகைகளைப் படைத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சுவனமிரண்டிலும்
பட்டுத்துணி பொருத்திய
விரிப்பில் சாய்ந்திருக்க
பழங்களை பக்கத்தில்வர பணிப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
மனித ஜின் தொடவே தொடா
விழிப்பார்வை நிலத்திருந்து
விலகா அமரகன்னியரை
அங்கு வைதத்திருப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அவ்வமர கன்னியரை வெண்முத்துச்
செம்பவளம் போலமைத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
நன்மைக்கு நன்மையன்றி
வேறென்ன கூலிதான் கொடுப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சுவனமிரண்டு மல்லாமலும்
இன்னுமிரண்டு சோலைச்சுவனம்
நாளை கொடுப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சோலைச் சுவனமிரண்டிற்கும்
நிறமோ கரும்பச்சை கொடுப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அச்சோலை சுவனமிரண்டிலும்
சுனைகளிரண்டை பொங்கி
ஓட வைப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
பேரீச்சையும் மாதுளையும்
பழங்கள் வேறுபலவும்
அங்கு கொடுப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
வனப்புமிகு நற்குணமுள்ள
அமரகன்னியரை அங்கு
வைத்திருப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
ஹ{ர் என்னும் அமரகன்னியரை
அங்கு கூடாரங்களில்
மறைத்திருப்பான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அவ்வமர கன்னியரை
மனித ஜின் தொடாமல்
மறைத்து வைத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
இரத்தினப் பசுங்கம்பளங்களிலும்
வனப்பொழுகும் விரிப்புகளிலும்
அவ்வமர மங்கையரை
சாய்ந்திருக்க வைத்தான்
உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும்
பொய்தானெனக் கண்டதெதைத்தான்?
அசுரவாற்றலும் அதியுயர்
சங்கையும் கொண்டிறைவன்
தன் பெயரில் பாக்கியம் கொண்டான்
.jpg)
.jpg)
No comments:
Post a Comment