Sunday, 20 November 2022

மாமாவும் நானும்


நிலாக்கால நிசி நேரம் அன்று ஒரு நாள், இராச் சமையல் நிகழ்வு ஒன்றில் அறிவுபூர்வமான ஆசிரியர்கள் கூடியிருந்து அனுபவங்களை பகிரும் போது நானும் அழையா விருந்தாளியாக செல்லவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை. அண்மையில் இறையடி எய்திய எனது ஜவ்பர் மாமா அவர்கள் என்னை  அழைத்துச் சென்று தனது ஆசிரியர் குழாத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்து மறு நாளே மாமா நோய்வாய்ப்பட்டார் பின் மருத்துவமனையில் தொடராக பத்து நாட்கள். ஈற்றில் உலகைப் பிரிந்தார். எனவே இதுதான் மாமா சமுகம் கொடுத்த இறுதி இரவு நிகழ்வு அப்போது  அநுபவம் இல்லா அற்பன் நான் ஓரோரமாய் நாற்காலியில் அமர்ந்து நகைச்சுவைகளின் போது நகைப்பொலியை அவ்வப்போது வெளிக்காட்டினேன். 



இரவு பதினொரு மணியை கடந்திருக்கும், அது பமுணுகம பாடசாலை வளாகம் ஒவ்வோர் ஆசானாய் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையானஇ மறக்கமுடியாதஇ பீதியைக்கிளறக்கூடிய என்று பல ரகங்களில் பல ரசங்களில் சொல்லி மகிழ்ந்தார்கள். அக்கதைகள் யாவுமே எப்படியோ ஒரு வகையில் யானைகளுடன் சம்மந்தா சம்மந்தம் கொண்டிருந்தன. ஒரு வேளை இந்த ஆசான்களுடன் யனைகள் சம்மந்தம் கலந்திருந்தனவோ என எண்ணத் தோணும் அளவு அத்தனையும் யானைக் கதைகள்தான்.


அவற்றுள் சுவையான, என்னை  ஆகர்சித்த, படிப்பினைகள் கொண்டவை என நான் கருதிய கதைகளில் ஒரு சிலவற்றைச் சொல்கிறேன். 

 

 

கதை : 01

இந்த ஆசிரியருடைய உறவினர் ஒருவர் வீதி விபத்துக்குள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவரை பார்வையிட சென்ற இடத்தில் ஒரு சிறுவனை காண்கிறார். அவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் அவனை சுற்றி சனக்கூட்டம். என்ன இது என்று விசாரித்து அறிந்து கொண்டார். அதுதான் பத்து அல்லது பன்னிரண்டு வயதை உடைய அந்தச் சிறுவனை யானை பிடித்து கொஞ்ச நேரம் பணயக் கைதியாக வைத்திருந்தது எனும் விந்தையாகும். 


சிறுவனது வீட்டில் விடிகாலை நேரம்,  ஹஜ் ஈகைத் திருநாள் அன்று பெருநாளை முன்னிட்டு பாட்டியும் பேத்தியும் நீராடிக் கொண்டிருக்கிறார்கள். மங்கலான மெல்லிருட்டு இருள் கலையும் நேரம், ஒளி மெல்லச் சிதறும் நேரம், நீராடும் கிணறு வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கிறது. அந்த நேரம் இந்த பன்னிரெண்டு வயது சிறுவனும் வெளியில் நீராட வருகிறான். இவனை கண்ட பாட்டி தேய்த்துக் குளிக்க சவர்க்காரம் எடுத்துவருமாறு கூறி அனுப்பியதுதான் தாமதம் கிணற்றடியிற்கு முன்கூட்டிய பெருநாள் வாழ்த்துச் சொல்ல  யானை ஒன்று விஜயம் செய்திருந்தது. 


இவ்வேளையில் பாட்டியும் பேத்தியும் கிணற்றுக் கட்டில் மறைந்து விட்டனர். யனையோ வலைவீசித் தேடாவிடினும் தன் தும்பிக்கை வீசி முன்னூற்று அறுபது பாகையில் சுழற்றித் தேடியது யாரும் சிக்கிய பாடில்லை. ஆனால் பெருநாள் கொண்டாடப்போகிறோம் எனும் ஆனந்தக் களிப்பிலும், தூக்க கலக்கத்திலும், பாட்டிக்காக சவர்க்காரமும் கையுமாக சிறுவன் கிணற்றடியை நோக்கி விரைகிறான். அந்த நேரத்தில் அதுவும் பாட்டி குளிப்பதை பார்க்க அங்கு யானை வரும் என்று யாருக்குத்தான் தெரியும் அதனால் பையன் பாராமுகமாகவே வந்து சேர்ந்தான். 


அமோக வரவேற்பளித்து பெருநாள் வாழ்த்தை இன்னதிர்ச்சி கொடுத்து சொல்வதற்காய் வந்த அந்த வேழம் தன் தும்பிக்கையால் சிறுவனை சுற்றிப்பிடித்துக் கொண்டது. அவன் நின்ற நிலையில் நிலை மறந்து நிற்கிறான் யானையோ சாகச வீரனாய் சுற்றிப்பிடித்திருக்கிறது. சுற்றும் முற்றும் சுற்றிப் பார்த்தது உற்றுப் பார்த்தது அந்தக் களிறு, யாரையும் காணவில்லை. அதனால் பொறுமை இழந்து அடுத்த கட்ட செயற்பாட்டிற்கு முன்னேறியது. அந்தச் சிறுவனை கிடையாக நிலத்தில் தனக்கு முன் குறுக்காக கிடத்தியது.


நிலத்தில் கிடத்திய சிறுவனின் மீது தன் முன்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி மிதிக்க எத்தனிக்கிறது. அவ்வேளை அருகில் உள்ள யாவரும் இந்தக் கொடூரக் காட்சியை காண வந்து சூழ்ந்திருக்கிறார்கள். பையனின் தந்தையும் வீட்டு வாசலில் வந்து நின்று பார்த்தவுடனே பாறையாகிப் போனார். ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு அருகில் வந்து நிற்பவர்களிடம் யானையை சீற்றப்படுத்தும் எதனையும் செய்ய வேண்டாம் என சாடையினால் சொல்லிவிட்டார். 



களிறும் காலை உயர்த்துவதும் பின் சிறுவனை உருட்டுவதும் என மாறி மாறி சிறிது நேரம் செய்து கொண்டு இருந்தது பின்னர் யானை வந்த நோக்கம் வாழ்த்து சொல்வதுதானே பிறகேன் வேறு வேலை நமக்கென விடைபெற்று சென்றது. சிறுவன் ஒரேயொரு எலும்பு முறிவுடன் தெய்வாதீனமாக பிழைத்துவிட்டான்.



கதை - 02


இந்த ஆசிரியர் நெற்பயிர்ச் செய்கையை வழமையாக செய்து வருகிற ஒருவர். எனவே வேளாண்மை பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் காலங்களில் வயல்களை காவல் காக்க வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கிறது அதுவும் பமுணுகமையில் யானைகளிடம் இருந்து காவல் காக்க வேண்டியது ஆறாவது கடமையாகும். மரத்தின் மேல் குடில் அமைத்து காவல் காக்கும் போது மழைநாளன்று தேரையொன்றை சாரையொன்று துரத்திவருகிறது தேரையோ குடிலுக்குள் ஓடி வருகிறது. எப்படி இருக்கும். மழை வேறு பெய்து கூரை தடியெல்லாம் ஈரலிப்பாய் இருக்கிறது பிடித்தால் கை வழுக்கும் நடந்தால் கால் சறுக்கும். தேரை பிடிக்க வந்த சாரை ஆளை கடித்தால் அது வேறு வில்லங்கம் ஆதலால் அவசரமாய் ஒரு தீர்வு வேண்டும். உடனே குடில் உடைந்து விழுந்தாலும் பரவாயில்லை என்று குடில் கட்டிய கம்பை முறித்து சாரைக்கு வெளுத்ததில் குறி தவறவில்லை சாரை செத்தது தேரை தப்பித்தது. எனவே  இவ்வாறு காவல் காத்து வருகின்ற காலப் பகுதியிலே ஒரு நாள் இரவு பத்து மணியளவில் மூன்று யானைகள் வயலின் முன்னுள்ள குளத்திற்குள் வந்து இறங்கியிருந்தன. 



வந்தது முதல் குளத்தில் கும்மாளமிட்டு கூத்தாடிக் கொண்டு இருந்தன. இப்படியே நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் யானைகள் அங்கிருந்து நகர்வதாக இல்லை. இந்த ஆசிரியரின் வேளாண்மை வயல் கதிர்விட்டு குலை கவிழ்ந்து நன்கு விளைந்திருந்தன. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை ஆனால் அதற்கிடையில் வந்துவிட்டன யானைப் படை. காவலுக்கு ஆளிருக்கின்ற காரணத்தினால் வயலுக்குள் இறங்கமுடியாமலும் குளத்தை விட்டு அகல முடியாமலும் இரண்டும் கெட்ட தர்ம சங்கடத்தில் நீரள்ளி அமளி துமளி செய்து கொண்டு இருந்தன. 


இந்த ஆசிரியரும் மரத்தின் மேல் குடிலமைத்து குடிலுக்குள் இருந்து பார்த்த வண்ணம் இருக்கிறார். இரவு கொஞ்சம் கொஞ்சமாய் விடிகிறது ஆனால் ஒரு முடிவு தெரியவில்லை. இதற்குள் விடிந்தவுடன் பாடசாலை  செல்ல வேண்டும் பாடம் நடாத்த வேண்டும் இதற்குள் இரவு உறங்கி இருக்க வேண்டும். இவற்றுள் எதுவும் நடந்தபாடில்லை. என்ன செய்வது தெரியவில்லை. இரவும் நன்றாக விடிந்துவிட்டது. வேழங்கள் மூன்றும் வேறு இடம் சென்று தொலைக்கவும் இல்லை. நேரமும் நின்று காத்திருக்கவும் இல்லை. ஒருபக்கம் வேளாண்மையை வேழங்களிடம் இருந்து காத்தாக வேண்டும். மறு பக்கம் பாடசாலையில் பாடம் புகட்டியாக வேண்டும்.


இறுதியில் இவ்வாசான் “கடவுளே! இந்த காட்டு யானைகள் உன் பொறுப்பு?” என்று விட்டுவிட்டு பறந்தடித்து பல் துலக்கி நீராடி பாடசாலை வந்ததும் வந்து தழுவியதே ஒரு தூக்கம். அன்றோடு ஒரு முடிவெடுத்தார். அம்முடிவென்னவென்றால் உறங்காமல் ஒரு நாளும் இருப்பதில்லை, ஒரே நேரத்தில் இரு வேலை பார்ப்பதில்லை என்பதாகும்.  


கதை - 03


இவ்வாசிரியர் சொந்தமாக மகிழுந்து (Car) ஒன்றை வைத்து இருந்தார். சொந்த வாகனம் என்பதால் எந்த இடம் வேண்டுமானாலும் போவதில் பிரச்சினை இல்லை. அது எந்த நேரமாகக் கூட இருந்தாலும் பரவாயில்லை. வாகனம் ஒன்று வாங்குவதற்கு முன்னர் வேண்டாத பயணங்கள் வருவதில்லை. ஆனால் வாகனம் ஒன்றை வாங்கிய பின் குடும்பத்தோடு பயணம் போவதென்பது சடுதியாக அதிகரித்துவிட்டதை அவர் உணர்ந்தார்.


என்றாலும் தேவைக்கென்று வாங்கியது தேவையின் போது உபயோகம் இல்லை என்றால்  வாங்கி என்ன பயன்? எனவே பாரியாருடனும் சிறு பிள்ளைகளுடனும் நள்ளிரவென்றும் பாராமல் அத்தியவசியமற்ற யாத்திரைகள் செல்லுவது வாடிக்கையாக மாறி இருந்தது. இவ்வாறு காலம் சென்று கொண்டு இருந்தது நிம்மதி என்பது குறைவது போல் தோன்றியது. ஒரு கட்டத்தில் நிம்மதியே தனக்கு நிம்மதி தேடி வேறிடம் சென்றுவிட்டதோ என சொல்லும் அளவிற்கு அன்றொரு நாள் நள்ளிரவு பயணம் அமைந்திருந்தது.


இவ்வாறு பயணிப்பதை இவ்வாசிரியரின் தந்தை கிஞ்சிற்றும் விரும்ப இல்லை. மாறாக இது பற்றிய அவரது எதிர்ப்பையும் மகனின் மீதும் மகனின் குடும்பத்தின் மீதான அக்கறையையும் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டு இருப்பார். இன்னும் ஏன் நள்ளிராவனாலும் அலைபேசியில் மகனை தொடர்பு கொண்டு “நீ எங்கிருக்கிறாய்? என்ன செய்கிறாய்?” என்றவாறு விசாரித்து அவர் அவரது விசனத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.  


இப்படி ஒரு நாள் பயணத்தில்தான் மகிழுந்தில் பிள்ளைகள், மனைவி சகிதம் தானும் என யாவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அத்தருணம் நேரம் நட்ட நடு நிசி. எப்படியும் இரண்டு மணியை கடந்திருந்து. வாகனம் போய்; கொண்டு இருக்கிறது. வாகனத்தினுள் குழந்தைகள் மற்றும் மனைவி என யாவரும் ஆழ்நத உறக்கம். வாகனத்தை ஓட்டிச் செல்கிற ஆசிரியரின் விழிகளில் உறக்கத்தின் ரேகைகள் வேர்விட்டு மரமாகிக் கொண்டிருந்தன. 



சற்று நேரத்தின் பின்னர்தான் வாகனம் வழி மாறிப் போய்க் கொண்டிருக்கிறது என்றும் வழிமாறி கன நேரமாகிவிட்டதும் என்றும் தெரிந்தது. தற்போது ஹொரவப்பொத்தான பகுதியில் உள்ள பயங்கரமான விபத்துகள் நிகழுகிற யானைக் காட்டின் மத்தியில் வாகனம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனும் வாசகம் நினைவுக்கு வருகிறது. இவ்வளவு நாட்காளாய் இந்த வாகனமும் வேண்டாம் இப்படியான வேளை கெட்ட பயணங்களும் வேண்டாம் என தந்தை சொன்னது நெஞ்சில் நின்று நிழழாடுகின்றது. ஒருவாறு பயணம் பயத்துடன் பாதுகாப்பாய் நிறைவடைந்தது. அன்றோடு அந்த வாகனம் விற்கப்பட்டது. அன்றிலிருந்து வேண்டாத, வேளை தவறிய பயணங்கள் முடிவுக்கு வந்தன. நிம்மதி மீண்டும் வீடு தேடி வந்தது. 













No comments:

Post a Comment