எண்ணம்போல எங்கும் போவார்
எங்கெங்கு போனாய் என்று
யாரங்கு கேட்கினும் - நானெங்கு
போனாலும் தாங்களுக்கென்ன
தாங்கமுடியாக் கவலையென்றே
பொங்கு சினம் பொறி தெறிக்க
அங்கவையில் ஆரிருந்தாலும்
அலட்சியமாய் பதிலளிப்பார் சிலர்
தாயங்கு வந்து நீயெங்கு போனாய்
நாமிங்கு பலமணி நேரமாய் உனைக்
காணாமல் தயங்கித் தவங்கித்
தவித்திருந்தோம் என்று கேட்டாலும்
நாயங்கு நின்று குரைப்பதாய்
முறைப்பார் சிலர்.
படுத்துறங்கி பல்துலக்கி தேநீர்
பருகிப்பின் வெளியில் போனால்
ஊரெங்கும் உலவித்திரிந்துவிட்டு
நள்ளிரவில் வீட்டார் உறங்கும்
வேளை கூரை ஓட்டை கழற்றி
வீட்டினுள் இறங்குவார் - சப்தமின்றி
சமையலறையில் உண்டுவிட்டு
உறங்குவார் இன்னும் சிலர்.
ஆனால் சிறையில் நாமோ
சிறுநீர் கழிக்க வேண்டும் என்றே
அறையிலுள்ள அனைவரும்
ஆலோசனை செய்து
முட்டிக்கொண்டு மூத்திரம் வரும்வரை
ஆத்திரம் கொள்ளாமல் காத்திருப்போம்
இனி அமைதி காப்பின் சிறுநீர்ப்பை
வெடிக்கும் இல்லை சிறையிறை
நாறிக்கிடக்கும் எனும் நிலைவரும்
வரைக்கும் ஆறுதலாய் இருந்து
பொறுத்தது போதும் இனி
பொத்துக் கொண்டே பாயும் சிறுநீர்
சரி கழிவறை போவோம் என்று
காவலாளியை அழைப்போம்
காவலாளியோ காதுகிழிய கதைகளாயிரம்
கூறி - கிழிந்த காதுவழியே இரத்தம்வந்து
அது நாறி இருக்க - மூத்திரம் பெய்ய
பாத்திரம் ஒன்றே போதும் என
காத்திரமான பதில் கூறி எம்
ஆத்திரத்தை கிளறுவார்
சமாதானமாய் சமரசம் பேசி
சற்றே விரைந்து போவோம் என்று
சொல்லி காவலாளியின் ஆழ்
நெஞ்சை கொள்ளையடித்து
எங்கள் கஷ்டநிலை சொல்லி
ஆயிரம் வார்த்தையால் வாயறிக்கை
அனுப்பி அவரதை அனுமதித்து
கைவிலங்கு போட்டு கால்நடையாய்
நடந்து போகையில் மின்தூக்கி இடையே
கிருமி தாக்கி இடையில் நிற்க
அவசரமாய் போக வேண்டி
பலநூறு படிகளில் இறங்க
ஆறாம் மாடியில் இருந்து
இரண்டாம் மாடி போகும் போது
சிறுநீருக்கே கவலை வந்து
சிறுநீரோ குடிநீராய் மாறி
இரைப்பைக்குள் அதுவே
இடம்பெயர்ந்து இருக்கும்.
2020.07.15
6.30 பி.ப
சிறை
ஆறாம் மாடி
கொழும்பு


No comments:
Post a Comment