Tuesday, 11 October 2022

ஆகுகவென்பான் ஆகிவிடும்


வழக்கை இறுக்குவார் இறுக்கட்டும்

வேண்டாமென என்னை நறுக்குவார் நறுக்கட்டும்

இனியிவன் தொலைந்தான் என்றே மீசை

முறுக்குவார் முறுக்கட்டும்


சொற்றீயால் என்னை கருக்குவார் கருக்கட்டும்

ஏனையோருக்கு எனைப்பற்றி பொய் விஷம் 

பருக்குவார் பருக்கட்டும் - தண்டனையால்

என்வாழ்வை உருக்குவார் உருக்கட்டும்

உயிரோடு என்மேல் சமாதிக்கல் 

அடுக்குவார் அடுக்கட்டும்




ஆயிரம் பேர்கூடி ஆதவனை 

அழிக்க முடியாது

ஆண்டவன் இட்ட ஆணைமீறி

அணுவும் அசையாது


உலகமே ஒன்றுகூடி என்னை 

ஒழிக்க வந்திடினும்

உலகாளும் ஒருவன் என்னை

காக்க எண்ணுகையில்

கண்ணிமைக்கும் கணத்தில்

என்னை காத்திடுவான்.


உலகமகா வல்லரசுகள் ஒன்றிணைந்து

என்னுயிர் காக்க எண்ணியிருக்க,

ஏகன் என்னிறைவன் என்னையழிக்க

எண்ணிவிட்டால் எண்ணியொரு

நொடிகூட போதாது அழிந்து போவேன்.

ஆகுக என்பான் ஆகிவிடும்.






2020.07.06

9.30 மு.ப

சிறை

ஆறாம் மாடி

கொழும்பு


No comments:

Post a Comment