Wednesday, 5 October 2022

பமுணுகம (Bamunugama)


வழித் தொலைவெங்கும்

வடிவுமிகு வாகனங்கள்

விழித் தொலைவெங்கும்

வயல் விரிந்த கதிர் நர்த்தனங்கள்


கருநிறப் பெரும் பாதையின்

இருமருங்கும் வெண்ணிற

நெடுங்கோடுகள் - வரும்

வழியெங்கும் மயிலாடும்

வயலோடைகள்


மன்னார் எனும் மாதலம் இருந்து

பமுணுகம எனும் பூதலம் புகயிலே

காலலம்ப போகும் வழியில்

குளங்கள் ஏராளமுண்டு

வாயலம்ப தேனீர் தரும் 

மனைகள் கூடவேயுண்டு


புராதன பமுணுகமை பேரூராம்

பண்டுகாபயன் காலச்சரித்திரத்திற்கு நேராம் 

ஊராருழைப்போ வயலுழும் ஏராம் 

என்றும் வானில் வட்டமிடும் காராம்

பற்றாக்குறையில்லை என்றும்

வற்றாக்குளத்தில் நீராம்

கற்றோருளதால் ஆங்கண்

அறிவோ கூராம்


பமுணுகமைக்கு வடக்கே 

சிங்கள ஊராம்

தெற்கே ஊற்றுப்பிட்டி

என விரியும் பெரும் பாராம்

மேற்கதனில் மல்வத்து மாநதியின்

வயிற்றுதித்த கிளைநதி மகளாம்

கிழக்கதனில் இமயத்தில் கண்டெடுத்த

இளமலை ரிட்டிகலயாம்



நெல் விளையும் எள் விளையும்

பல் தினையும் ஒருங்கு தழையும்

நல் வயலும் கண் கவரும்  

பெருங்கல்மலையும் கொண்டது 

பமுணுகமையாம்


ஜலமென இளகும் கருணை 

மனமாந்தர் குழுமி வாழும்

பழமை பூமி இதுவாம் -  பசுத்தருக்கள்

தொடராய் நிழல்தரும் நெடுந்தெருவாம்


சரித்திரம் புகழும் சாதனை 

மைந்தர் சாகசங்கள்

கொண்டது இவ்வூராம்

குறிஞ்சியும் மருதமும்

கொஞ்சி விளையாடிக்

கூடியிங்கு கொண்டாடுமாம்

அழகும் வளமும்

இணைந்து கொண்டதே

இறைவன் படைப்பின் பேரருளாம்.


2022.08.26

2.26 pm








No comments:

Post a Comment