வெற்றி வந்து வாழ்த்தும் போது
மதிமயங்கி மமதை கொள்ளாது
வெற்றி தந்த வல்லவனுக்கு
நன்றி சொல்லி நாவடக்கிடல்
நல்லோர் பண்பாமே!
தோல்வி வந்து தாழ்த்தும் போது
துயர் கொண்டு துவண்டு விடாது
தோல்வி தந்த தேவனை எண்ணி
பொறுத்திருத்தல் பெரியோர் பண்பாமே!
வெற்றி வந்த வேளையில்
நன்றி சொன்ன நான்
தோல்வி வந்த வேளையிலே
தேவனை தூற்றிடல்தான் தகுமோ?
பொறுமை என்பதொன்று யாதென்று
காண்போமா? – பொறுத்து பொறுத்து
இனி பொறுத்தது போதும் பொங்கி
எழுவோம் எனப் பொறுமை இழந்த
போதிலிருந்து பொறுத்து இருப்பதே
பொறுமையாம்.
சுடுநெருப்பு சுடாமல் போனதென்ன?
சுடாவிட்டாலும் குளிர் நெருப்பானதென்ன?
நெருங்கி இருப்பவரும் நெருப்பென்றால்
நெடுந்தூரம் போவதென்ன?
நீந்தி விளையாடும் நீரென்றே
நெருப்பினுள் நபி இப்ராஹீம்
இருந்ததென்ன? - இறையாற்றலறிய
இதைவிடத் தேவை வேறென்ன?
ஆழ்கடலில் மீன் விழுங்கி
மீண்டு வந்தவர் யாருமுண்டோ?
ஆனால் ஆழ்கடலில் மீன்வயிற்றில்
வாழ்ந்து வணங்கி வல்லவனை
வேண்டிடவே! – நபியூனுஸை
கடித்துண்ணும் கடல் மீனும்
கரை வந்து கக்கியதென்ன?
அங்கேயவர் உயிர் தப்பியதென்ன?
கடைசி நபியை கயவர்கள்
கொல்ல வந்த வேளையிலே!
கோமான்நபி குகை ஒன்றில்
புகுந்து இருந்த வேளையிலே!
சிலந்தி வந்து சாலை மறித்து
நூலைவிட்டு வலை பின்னியதென்ன?
புறா வந்து பாதை மறித்து
பளையமைத்து முட்டையிட்டதென்ன?
இவை யாவும் இறைவன்
கட்டளை யானதென்ன?
பெண்ணினத்தை தவிக்கவிட்டு
ஆணினத்தை அழித்துவிட்டு
அக்கிரமங்கள் செய்த
அட்டூழியக் காரன் - நபிமூஸாவை
கொன்றொழிக்க துரத்தி
வந்த வேளையிலே
நடுவே நதி நைல் குறுக்கறுக்க!
நபி மூஸாவோ! - இனியில்லை
வழி பிழைக்கவென்றே திகைத்திருக்க!
நதிமீது தடிகொண்டு அடிக்கவென்றே
ஈசன் மூஸாவிற்கு தூதிறக்க!
நதியோ இருவேறாய் பிளந்து
வழி கொடுக்க! – நபிமூஸாவும்
அவரன்பர்களும் மறுகரை
சென்று முடிக்க!
நதிநடுவே கொடுங்கோலனையும்
அவன் சேனைதனையும் மூழ்கடிக்க!
வல்லவன் வல்லமை பாடி முடிக்க!
சொல்லாயிரம் சேர்த்து நான்
பல்லாயிரம் கவியமைத்தாலும்
அவன் புகழ் எஞ்சி நிற்குமே!
பாதகி ஒருத்தி படுக்கையில்
பாவம் செய்ய சதிப்பாய் விரித்த
வேளையிலே! - பேரழகர் யூசுப்
பாழுஞ்சிறை போனாலும் பாதகியுன்
பாவத்தில் வீழேன் எனப்பகர்ந்தாரே!
அவர் வழி நாமும் சிறையிருப்போம்
ஆண்டவனை தொழுதிருப்போம்
அவனிடமே சரண் புகுந்திருப்போம்
அவனருள் மழையில் நனைந்திருப்போம்.
2020.07.04
9.30 AM
சிறை
ஆறாம் மாடி
கொழும்பு

No comments:
Post a Comment