Wednesday, 3 August 2022

வெல்லத் தமிழது வாழும்

 எண்மான உலகில் - தமிழின்

தன்மானம் காக்க இந்நிகழ்வின்

கண்போல வீற்றிருக்கும் 

ஆசான் கோபி கிருஷ்னரே!  










புவியெங்கும் புகழ்பேசும் 

தமிழன்னை பற்றி கவியரங்கில் பேச

வழிகாட்டிய தலைமைக்கவி

ஷிஹார் அவர்களே!


கனிவு கொண்ட தோழிகளே!

துணிவு கொண்ட தோழர்களே!

பணிவு கொண்ட சீடர்களே!

அறிவு கொண்ட ஆசிரியர்களே!    











மெல்லத்தமிழினி சாகும் என 

சொல்ல நாவது கூசும்

உள்ளக் கமலம் நோகும்

அதனால் வெல்லத்தமிழது வாழும்

அது சொல்லத்தான் வந்தேன் நானும்

வெல்லத் தமிழை அள்ளித்தரவே

துள்ளித் தேடி வந்தேன் நானும்


வெல்லத் தமிழது வாழவே

சங்கத் தமிழ் சாகரத்தில் மூழ்கி

சங்களவே சங்கைத் தமிழ்

கொணர்ந்தேன் நான்


நுங்கைப் பருகி வெயில்

வெக்கை போக்குவதாய்

கங்கைத் தமிழில் மூழ்கி – கடும்

உடல் வெக்கை தீர்ப்போம் வாரீர்!


சிற்றிலக்கியச் சோலையில்

சுற்றித் திரிந்து கலம்பக கனியும்

பள்ளுப் பழமும் பரணித் தேனும்

குறவர் எள்ளும் - தேடிக் 

கொணர்ந்தேன் கூடியுண்போம்

ஓடி வாரீர்!


நற்றமிழ்ச் சுவையை 

நம் நாக்கறிந்தால் இத்தனை நாளாய்

நமக்கிருந்த நாக்கு நமக்கு எதற்கு

என்றே நாக்கை அரிந்து நாய்க்கு

இடுவீர் - அதனால் நற்றமிழின் சாறெடுத்து

நம் நாவினில் ஊற்றும் தஞ்சை

தமிழ் இணையக் கழகத்தில்

இணைய விரைந்து வாரீர்!

இன்பத் தமிழில் கரைந்து போவீர்!


கம்பன் அமைத்த கவிகளிலே

தெம்பாய் தமிறி எழுகிறது

சீதையின் அழகை சிருங்காரமாய்

சொன்ன சிறப்பு அது இனிப்பு


வள்ளுவன் வாக்கினில் 

வந்தது வாழ்க்கை தத்துவம்

அதைப் பேணி வாழாதார்க்கு

அது புளிப்பு


நெருப்பில் வெந்து மேனி

நொந்து தீய்ந்தும் தமிழ்

தாகம் தணியா தியாகி

தமிழ் நந்தி கதை கேட்கையில்

அது கசப்பு


மட்டரக பையனிடம்

சுட்ட பழம் கேட்டு – கெட்ட

பெயர் ஏற்றோமோ என்று

நட்டமடைந்த ஒளவை கதை

நமக்கு உவர்ப்பு


முல்லைக்கு தேர் கொடுத்து

கொடைக்கு எல்லை இல்லை

என்று பறைந்த பாரி, நாட்டிற்கு

தன்னுயிர் கொடுத்த கதை துவர்ப்பு


“இன்பக் கொடு நெருப்பாய்

அனற் சுவையமுதாய்” என 

புத்தம்பது கவி புகுத்தி

இரத்தங்களில் வெறியேற்றி

புதுமைப் பெண்ணைச் சொல்லி

உன்மத்தம் கொண்ட பாரதி

கவிதைகளோ உறைப்பு


அறுசுவையும் சேர்த்து 

ஒரு கோப்பையில் - எமக்கு

தரும் தஞ்சை தமிழ் இணைய

கழகத்தின் அரும்பணியை

பெரும்பணியை துரும்பென

தூற்றாது இரும்பென திடப்படுத்த

விசும்பென விரிவுபடுத்த

விரைந்து வாரீர் - விழுந்தாலும்

எழுந்து வாரீர்.


வெல்லத் தமிழது வாழும் அல்ல

வெல்லத் தமிழது உலகாளும்

அதற்காய் தஞ்சை தமிழ் 

இணையக் கழகச் சேவை 

பாரெங்கும் நீளும்


நீருக்குள் மறையும் வேராய்

பாருக்கே தெரியாமல் இருக்கும்

எங்கள் ஆசிரியை சுவேந்திர ராஜா

அருமை ஜெயந்தினி மற்றும்

நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன்

நிபாத் அவர்களுக்கும் நன்றிகள். 



வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

அரியணை ஏறுக தமிழ்!


இந்தக் கவிதை 2020 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம், மன்னாரில் நிகழ்ந்த தஞ்சாவூர்  தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமைக்கவி சிஹார் அவர்களின் தலைமையில் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.  





No comments:

Post a Comment