Thursday, 28 July 2022

நான் விலங்கு


பகுத்தறிவு படைத்தவன் - பூமியை 

பலதுண்டாய் பகுத்துடைத்தவன்

பாராள வேண்டுமென பாதாளத்தில்

தினம் பல்லாயிர உயிரகளை 

புதைக்கின்றவன் - ஆனால் 

ஏசும்போது மட்டும் எருமை என்றும்

கழுதை என்றும் விலங்குகள்

பெயர் சொல்லி விசனம் தெரிவிக்கின்றான்

இந்த நன்றி கெட்ட மனிதன்


என் நண்பன் எருமை என்றான்

என்னை – நன்றி என்றேன் நான்

எவ்வளவு மழை பொழிந்தாலும் 

எந்திக் கொண்டிருக்கிறது எருமை


அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல

இகழ்வாரை பொறுத்தல் தலை எனும்

வள்ளுவக் குறளை தன் வாழ்வில்

கொண்டது எருமைதான்.




எல்லோரைப் பற்றியும் ஏதாவது

சொல்லும் மனிதனாக இருப்பதிலும்

தன்னைப் பற்றி எவர் என்ன சொன்னாலும்

ஏறெடுத்தும் பாராத எருமையாய்

நான் இருப்பதில் என்ன தவறு 



கடைக்காரன் என்னை கழுதை என்றான்

கடவுளுக்கு நான் நன்றி என்றேன்

தம்சுமையை பிறர்மேல் சுமத்தும்

மனிதனைவிட பிறர் சுமையை தானே 

சுமக்கும் கழுதையாய் நானிருப்பேன்.


நடைபாதையில் நான் போகும் போது

நடுவில் வந்தொருவன் நாய் என்றான்

நன்றி என்றேன் நான் - உண்டவீட்டிற்கு

உபத்திரம் செய்யும் உள்ளொன்று வைத்து

பறமொன்று பேசும் நன்றிகெட்ட மனிதனிலும்


ஒருபிடி உணவிட்டவனையம் 

ஊரில் எங்கு காணினும் 

வாலாட்டி நன்றி பாராட்டும்

நாயாய் இருப்பேன் நான்


மாடென்று திட்டி முறைத்தார் மாமா

மனதிற்குள் மாட்டிற்கு நன்றி நவின்றேன்

பயனற்ற தரிசை உழுதுபண்படுத்தி பயிர்

வளரும் வயலாக்கும் மாடாய் நானிருப்பேன். 



தீங்கு தரும் மனிதனைவிட 

நன்மை தரும் விலங்கு உயர்ந்தது

மனிதன் என்றால் மாண்புகள் கொண்டவன்

மனிதன் மனிதனாக இருக்காத வரை நானும்

மனிதனாக இருக்கப்போவதில்லை


2020.08.25

10.00 AM


 #சிறை

 #ஆறாம் மாடி

 #கொழும்பு



No comments:

Post a Comment