அந்தி சாய்ந்து மெல்ல விழுகிறது பகல். மந்தி பாய்ந்து மரத்தில் மெல்ல மேலேறுகிறது. நீல வானும் நெடுங்குளமும் நீல நிறத்தை நீக்கி பொன்னிறப் போர்வையை போர்த்திக் கொள்ளும் வேளை கதிராகி பின் பாலேறி பருவமாகிப் பழுத்துக் குலைவிட்டு தலைகுனிந்திருக்கும் நெற்பயிர்களை காக்க வெண்டும் எனும் எண்ணம் எம் ஊரார் நெஞ்சில் எழும். உடனே அருந்திக் கொண்டிருந்த சாயங்கால சாயத் தேனீரில் முக்கால் பங்கை பருகிவிட்டு கால் பங்கை ஊற்றிவிட்டு கமங்களுக்கு புறப்படுவார்கள்.
அது போல் ஒரு முறை யானைக் காவலுக்கு நானும் தம்பியும் (Aaqil jazeem) புறப்பட்டோம். அப்பொழுது எனக்கு பதினாறு வயதிருக்கும் என் தம்பிக்கு பதினொரு வயதிருக்கும். அன்று தந்தை வேலை நிமித்தம் வெளியூர் போனதனால் உள்ளுர் விவகாரம் நம் பொறுப்பில் வந்தது. அதுதான் வயலுக்குள் யானை இறங்காமல் யானைக் காவல் செய்வதாகும். இளகாது இறுகிய சங்கிலியை இருமுறை சுழலவிட்டு ஈருருளியில் ஏறி மிதித்துக் கொண்டே போய் வாசனை வீசும் உசாய மரத்தின் அடியில் ஈருருளியை சாய்த்துவிட்டு கால்நடையால் ஐநூறு மீற்றர் கடந்து வயலுக்குச் செல்வோம்.
இதற்கு முன் யானைக்காவலுக்கு வந்து எனக்கும் தம்பிக்கும் எந்த முன்னனுபமும் இல்லை என்றாலும் அக்கறையின் வேகத்தில் சென்றுவிட்டோம். இருளும் கவிந்து மின்மினியும் குவிந்து இருக்கும். “ பார்த்துக் காலை வை பாம்பு இருக்கும்” என தந்தை அறிவுரை வரம்பில் நடக்கும் போது அடிக்கடி நினைவுக்கு வரும். எனவே மெல்லக் கால்வைக்க காலில் இரத்தம் கசியும், என்ன நாகமேதும் சீண்டியதோ என கிஞ்சிற்றும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. திண்ணமாய் நெருஞ்சி முள் தைத்திருக்கும் காரணம் முத்தசாப்த ஈழப் போரில் இக்காணிகளில் நெல் விதைக்கவில்லை. இயற்கையாய் விதைக்கப்பட்டதெல்லாம் இந்த முட்கள்தான்.
வயலுக்குச் சென்று குடிலுக்கருகில் நின்று தீமூட்டி அமர்ந்து இளைப்பாறி இருக்கும் போது அயல் வயல்க்காரர்களிடம் இருந்து “ பெருங்கசையன் ஒண்ணு தனியனாய் வலம் வருது… பார்த்து வயலுக்குள் இறங்கவிடாதே!” என கைபேசி அழைப்பு வரும். இப்படி அடிக்கடி வராத யானைகளுக்கு இவர்கள் அழைப்புவிடுவதனால் நிம்மதியாக இருந்த நெஞ்சு பதறித்துடிக்கும். குலைநடுக்கம் இரட்டிப்பாகும். அயல் வயல்க்காரர்களை அவசரத்திற்கு அழைத்தாலும் அரை மைலுக்கு அப்பால் இருந்துதான் வரவேண்டும். அவசரப்பட்டு ஆசையில் ஏக்கர் கணக்கில் விதைத்துவிட்hர்களோ என எண்ணத் தோணும்.
நள்ளிரவு நேரம் கைபேசி மின்வலுவை இழந்திருக்கும் சரி பரவாயில்லை என எண்ணிக் கொண்டு கையில் பட்டாசும், தீப்பெட்டியும் மின்சூளையும் எடுத்துக் கொண்டு நெளிவு சுழிவாய் வளையும் வரம்பு வழியே நெளிந்து சுழிந்து கமத்தை வலம் வரும்போது இன்னும் இரு நாட்களில் அறுக்க வேண்டிய வயலுக்குள் வாய்க்கால் உடைப்பெடுத்து நீர் வெள்ளம் பாயும்.
உடனே விழுந்தடித்துக் கொண்டும் பதறிக் கொண்டும் மண்வெட்டி எடுத்து வந்து வாய்க்காலினுள் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி மண் வெட்டி எடுத்து மறித்துக்கட்டி முடியும் போது சேறும் நீரும் பனியும் சேர்ந்து மேனியை ஊறவைத்துவிடும். இவை எல்லாம் அடிக்கடி நிகழ்வதால் சகஜம்.
வயலை சுற்றி ஐந்து முறை வலம்வரும்போது முக்கால் இரவு முடிந்து போய் இருக்கும். இனி யானை வராத எனும் நினைப்பில் மீதி நேர உறக்கம். ஆனால் இப்படி எந்த வேலையும் நானும் தமபியும் செய்யவே இல்லை மாறாக வயலுக்குப் போனதும் ஓரிரு மணித்தியாலங்கள் உறங்காமல் இருந்தோம். கொஞ்ச நேரத்தில்; “நாம் உறங்கலாமே யானை வந்தால் தொலைபேசி அழைப்பு வரும்தானே” என்று தம்பி உரைத்தான், நானும் இதற்கு முதலில் காவலுக்கு வந்ததில்லை தமிபி தந்தையுடன் வந்திருக்கிறான் ஆனால் அவன் தூங்காமலே இருந்ததில்லை. தம்பி என்பதால் அவனை தந்தை உறங்க வைத்துவிட்டு தந்தை மட்டுமே காவலுக்கு இருப்பார். இதனால் நாமிருவரும் போர்வையால் போர்த்திக் கொண்டு மூட்டிய நெருப்பின் கதகதப்பில் உறங்கிவிட்டோம்.
எமது காவல்க்குடில் வயலின் நடுவே அமைந்திருந்தது எனவே நாம் உறங்கவே கூடாது. அப்பொழுது எமது வயல்தான் இறுதி வயல், அடுத்தது காடுதான். ஆனால் அந்தளவு தீர்க்க தரிசனமெல்லம் அப்போது எமக்குத் தெரியாது. எமது குடிலுக்கு பின்னால் ஒரு கேணி இருக்கிறது. இது இன்றும் இருக்கிறது ஆனால் தற்போது குடில் இல்லை. ( இனி குடில் தேவை இல்லை அது வேறு விடையம்)
நாம் உறங்கி நள்ளிரவாகி விட்டது குடிலுக்குப் பின்னால் உள்ள கேணியில் திடீரென சலசலவென சத்தம. நான் எழுந்து பார்த்தேன் அது யானை . ஒரு யானை அல்ல மூன்று யானைகள். அதுவும் குடிலுக்கு மிக அருகில், இன்னும் கொஞ்சம் உறங்கி இருந்தால் குடிலை மிதித்து முன்னேறி இருக்கும் அந்த யானைகள். உடனே தம்பியை எழுப்பி யானை வந்திருக்கிறது என்றேன். உடனே தம்பி “ வாங்க நாநா வீட்டுக்கு ஓடிப்போவோம் என்றான். நூன் சொன்னேன் “ பைத்தியமா ஓடிப்போவ…” உடனே தம்பி “ ஒங்களுக்கு பயிர் முக்கியமா இல்லை உயிர் முக்கியமா? வாங்க ஓடிப்போவோம்” என்றான்.
நான் “ டேய் உயிர்தான் முக்கியம் வாப்பா வந்த பிறகு வயலக்குள்ள யானை இறங்கினத கேள்விப்பட்டா…. நாங்க உயிரோட இருந்து முடிஞ்சுது வா யானைய துராத்துவோம்” என்றேன். ஒருவாறு பனியில் ஊறிய பட்டாசு தீப்பெட்டியை எடுத்து கொழுத்தினால் எரியவில்லையே. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பட்hசைப் பற்ற வைத்தால் புஷ் என்கிறது, அடுத்த வான வெடியை குழாயினுள் இட்டு பற்ற வைத்ததும் வெடிக்கும் முன் வயலுக்குள் சென்று அணைந்த விட்டது. உடனே தம்பி மண்வெட்டியில் கம்பியால் பலமாக தட்டடிக் கொண்டு இருந்தான். நான் அதற்குள் இன்னுமொரு வானவெடியை பற்ற வைத்தேன் அது வானுயர சென்று “டொப்” என மெதுவாக வெடித்தது. இது யானையின் செவியில் பலூன் உடைந்தது போல இருந்திருக்கும். கூக்குரலிட்டுக் கொண்டே இன்னுமொரு வான வெடியையும் யானைக்கு நேராக விட்டு வெடிக்க வைத்தோம் ஆனால் அதுதான் இறுதியானது. ஒருவாறு தொடரான முயற்சியினால் இறுதியாக யானைகள் சென்று விட்டன. அவை பயந்து வெளியே சென்றனவோ இல்லை பரிதாபத்தால் சென்றனவோ இல்லை போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து எனும் பழமொழி நினைவுக்கு வந்ததனால் சென்றனவோ தெரியவில்லை.
யானைகளை துரத்தி முடிக்கும் போது சுபஹ{ நேரம் நானும் தம்பியும் வீடு வந்து சேர்ந்தோம். வெளியூர் போன தந்தை நேராக வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும். எனக்கு கடுமையான பாராட்டு. நான் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தேன். அந்தப் பாராட்டின் மூலம் நானும் தம்பியும் ஆறு ஏக்கர் வயலில் மூன்ற ஏக்கர் நிலத்தை மூன்று யானைகளுக்கும் நிலக்கொடை அளித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டோம்.
அப்போது என் மனதில் நினைத்துக் கொண்டேன்
“ சேத்த சொத்தெல்லாம் சேதாரமாச்சு
பார்த்த கண்ணு பாழாச்சு
காத்த காவல் போதும்
போடா படிக்க…..”
![]() |
| With Aaqil jazeem |

.jpg)


No comments:
Post a Comment