Tuesday, 26 July 2022

விழுந்து நட எழுந்து விட

 


சிறுவனாய் நீ இருந்த வேளையில்

உறவுகள் உச்சிமோந்து உன்னை

மெச்சிப் பேசி மேலுயர்த்தும் 

சிறுவனுன் சிறுதிறமை கண்டு

ஊரே உனக்கு பெரும்புகழ் பாடும்


சிறார்களிடையே நீ சாகசங்கள்

செய்த போது சொந்தமில்லாத

சில பந்தங்கள் உன்னை 

சிரிப்புடனே போற்றும்


சிறுவன் நீ கொஞ்சம் வளர

ஊரும் உறவும் உன்னை அச்சுறுத்தும்

இளமையில் நீ புதுமையாய்

திறமைகள் செய்த போது

உறவுகள் உன்னை எச்சரிக்கும்


எல்லோர் போலும் இல்லாது

வெல்லவழி வித்தியாசமாய் 

தேடின் நட்புகள் உன்னை 

நாளும் நச்சரிக்கும்


எல்லோர் சொல்லையும் மீறி

உன் திறமையில் எல்லை மீறி

சிறுவன் எனும் எல்லை கடந்த

பின்னே எல்லோரும் உன்னை 

புகழுவர் - ஆனால் புகழுக்கடியில்

பொறாமை புழுக்கள் நெளியும்


நெஞ்சுக்கு நேராய் நீ 

வளர்ந்து விட்டதால் 

நெஞ்சுக்குள் ஒன்றை வைத்து 

நேருக்கு நேராய் 

ஊரே உன்னை வாழ்த்தும்

ஆனால் வாழ்த்தினடியில்

வஞ்சகம் வேர்விடும்


உன்னிலக்கில் தவறாது தொடர்ந்து

நீ போனால் -  நெஞ்சை கிள்ளி

எறிவதாய் எள்ளிநகையாடிய நட்புகள்

உன்னை தள்ளிவிட முடியாமல் தவிக்கும்


எங்கோ ஒரு கிடங்கில் நீ

இடறி விழுந்தால் - உன்னை 

வாழ்த்திய வாய்கள் யாவும்

வாள்த்தீயை நாவில்சேர்த்து

நெஞ்சை அறுத்தெரிக்கும்

வார்த்தைகளை கக்கும்.


விழுந்தவனே எழுவான்

நடந்தவனே விழுவான்

வீழாதவன் எப்படி 

மீண்டெழுவான் ???  


வீழாதவன் நடக்காதவன்

எழாதவன் இயங்காதவன்

நீயோ இயங்கும் ஆதவன்

இயங்குமாதவனும் மாலையில்

இயங்காது மயங்குமாதவனாய்

மறைந்தால் மறுநாள் காலை

தயங்காது ஆதவன்  - தங்கதிர்ப்

புயங்களுயர்த்தி உதிப்பான்


வீழ்ச்சிக்குத்தான் எழுச்சி

எழுச்சிக்குத்தான் வீழ்ச்சி

சூழ்ச்சிகள் யாவும் வீண்முயற்சி

நிலைக்கும் நாளைய ஆட்சி

அதனால் நீ விழுந்து நட

நாளை மீண்டு எழுந்து விட  

With  Afham Jazeem


இந்தக் கவிதை தூக்கத்தில் கனவாக வந்த கவிதை, எனது தம்பி அப்ஹம்              ஜெசீமுக்கு ( Afham Jazeem )  கதிரையில் அமர்த்தி இந்தக்கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். தீடீரென கண்விழித்தேன். யாவும் கனவு. நான் சிறைக்குள் இருக்கிறேன்.பிறகு கவிதையை உணவுப் பொதி சுற்றிய காகித்தில் எழுதி வைத்தேன். 


2021.03.05

9.30 AM

#இரண்டாம மாடி

#கொழும்பு

 




No comments:

Post a Comment