Saturday, 28 December 2019
முறுக்குமுடியழகா!!!!!!
நீரொட்டாத் தாமரையாய்
சிரசுத் தாமரையில் நீரொட்டாமல்
முறுக்கும் கம்பியென திருகி நிற்கும்
முடிகொண்ட முறுக்குமுடி முகவழகா!
உன் முகங் காணயிலே
என் சுகங் கொள்ளும் நெஞ்சம்
பொன் சுவை கள்ளுண்ணுமே
உன் இதழ்பூக்கும் புன்னகை
யான் பார்க்க என்னிதயம் பூக்குமே!
உன்னோடு பழகிடும் காலம்
சிஷ்யன் எனும் ஸ்தானம் கடந்து
எந்தம்பியோடு குலவிடுவதாய்
குளிர் தேடும் கோடை அதுவாய்
நெஞ்சத்தில் சஞ்சலமின்றி சாந்தம்
வந்தமர்ந்து வாத்தியம் இசைக்குமே!
உன் பேச்சு நின் மூச்சு
சினம் கொண்ட உன் ஏச்சு
யாவும் எனக்கு என்றும்
இன்ப மோட்சம் தருமே!
யாது கூறினும் - மறுத்து
ஏதும் கூறாமல் - சூது வாது
சூட்சுமங்கள் உள்ளத்தில்
வைக்காமல் நீ பேசும் போது
உனை அள்ளி அணைத்து
உன்னெற்றியில் முத்தமிட்டு
உனை வாழ்த்த எண்ணம் எழும்
உன்னை காணும் போதெல்லாம்
நீ கொடுங் கோபம் கொண்டு
கொதித்து எழுந்து குத்திய வேளை
சுழன்று பறந்த கோப்பையல்லோ!
என்முன்னே வந்து என்னுள்ளே
நகைப்பூட்டுகிறதே!
பகல் வேளை பகலவன் முகிலுக்குள்
புகுந்து ஒழிந்த பொழுது வழமைக்கு
மாறாய் நீ வருத்தம் கொண்டு வதைபட்ட
கணம் என்னிதையம் சிதைப்பட்டு சிக்கியது
உன் அகங்கை பற்றிய நொடி
என் அகத்தில் பற்றியது அன்புத்தீ
உன்மீது ஓரலாதியான கனிவு
கசிந்து பனிக்கிறது கவியாக!!!
மிடுக்கான நடை அடலேறு முகம்
வெட்டொன்று துண்டிரண்டாய்
வெட்டி வீசும் வாளென வார்த்தை
அறமறிந்து அதன் நெறிநிற்கும் வாழ்வு
ஆனால் அடி நெஞ்சில் அமிர்தம்
அன்பு எல்லாமுன் தந்தை - ஆசிப்!
நீ நீடூழி வாழிய!!!!!!!!!!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment