சாவதற்குள் சாதனையொன்று
செய்திடல் வேண்டும்
செத்த பின்பென்
பெயருக்கு பலநூறு
சாமரங்கள் சேவகம்
செய்திடல் வேண்டும்
வாழுங்காலம் வதங்கி
சாகாமல் - சாகுங்காலம்
சுருங்கி வாழாமல் - உயிர்
போகுங்காலம் எனை
சிதையில் புதைத்த
சாயங்காலமே சிதையோடு
சிதையாகவே என் கதை
முற்றிடலாகாது.
நான் சிதையில் புதையும்
போதே என் கதையின்
முதலெழுத்து எழுதிடல் வேண்டும்
பகலவன் ஒளி மங்கி
யுகமுடியும் போதும்
என்கதை தொடர்ந்திடல் வேண்டும்
இம்மை போய் மறுமை
வந்திடின் அங்குமென்
கதை காவியமாகிடல்
வேண்டும்.
யான் செய்யும் சாதனை
வழிகேட்டுக்கு வழிகாட்டாது
நாட்டுக்கும் வீட்டுக்கும்
காட்டுக்கு ஏட்டுக்கும்
உபயமளிப்பதாய் - இறை
கோட்டை கடவாமல்
இஃதாலே இறைவனெனக்கு
அபயமளிப்பதாய் அமைத்திடல்
வேண்டும்.
எழுத்துலகின் ராஜமௌலியாய்
கவியுலகின் கவிச்ககரவர்த்தியாய்
கலையுலகின் விலையுயர்
சிலையழகாய் சிறந்து
விளங்கிடல் வேண்டும்.
அன்னைத் தமிழின்
அன்புச் சிசுவாய் - யான்
ஆகிடல் வேண்டும் - செருக்கு
ஆரவாரங்கள் யாவும்
அவரோகணித்தல் வேண்டும்
நெருக்குவாரங்கள் பெருக்குவார்
நட்பு யாவும் வேண்டும்.
நாளை சுவனத்தில்
சங்கம் அமைத்து
அங்கும் பொங்கு
தமிழ் வளர்க்க வேண்டும்
செந்தமிழ் பாக்கடல்
எழுதி ஏகனை துதிபாடவேண்டும். எங்கள்
நபியை எஞ்ஞான்றும்
போற்றிடல் வேண்டும்
No comments:
Post a Comment