வெள்ளியன்று நள்ளிரவு – வான்
வெள்ளி மின்னி மறையும் நிசியிலே
அன்னல் ரஜாயி அலைபேசியில்
அழைத்து பேரூந்து வந்ததா? என
வினவிவினவி ஒரு நூறு வினாத்தொடுக்க
“இல்லையில்லை” என்றே நான்
சொல்லி சொல்லி பல்லில் நா மோதி
பல்லாடுகிறதே!!
பேரூந்தும் வந்தது நேரம் கடந்து
அங்குமிங்கும் திரிந்தோம்
அதுவரை நாம் நடந்து
ஆசனங்கள் ஏராளம் எங்கே
அமரலாம் என யோசனையில் மிதந்து
பின்னாசனமே நல்லாசனமென தேர்ந்து
பின்னாசனத்தில் அமரப்போனேன்.
பின்னாசனம் பெண்ணாசனம் என்றார்
பெருந்தலைவி பாத்திமா !!!!!!!!
ஆண்குலத்திற்கே அவமானம்
அந்தநொடி அடைத்தது நெஞ்சு
ஆணாசனமாய் ஆகட்டும்
முன்னாசனமென நினைத்திட நெஞ்சு
குடலை பிடுங்கும் கொடூர வாசம்
வீசும் கொழும்பு முகத்திடல் கடந்து
நறுமணத்தால் மாரடைப்பை நுகர்ந்து
மெல்ல நகர்ந்தோம்
ஒயாமடுவை வளைந்தோடும் வீதிகளில்
புகுந்து வங்கு வளைவுகளில் வளைந்து
விரைந்து முருங்;கன் தள்ளாடி சங்குப்பிட்டி
வழியே யாழ்நோக்கிய பயணம் தொடர்ந்ததுவே!
புறப்பட்டோம் - அறிவுறுத்தல்கள்
தரப்பட்டோம் - பாடல்கள் மாற்றும்படி
முiறைப்பட்டோம் - ஒளிவிளக்கை உடைத்து
சாரதியிடம் அகப்பட்டோம்
காரிருள் கலைந்து பேரொளிப்
பிழம்பு பாரெங்கும் பரவமுன்
பூலோகம் படைத்தவனை துதிக்கவே!
சுபஹ் எனும் தொழுகை தொழுது முடிக்கவே
விரைந்து போய் நாச்சிக்குடா பள்ளியில் இறங்கவே!
மெல்லப் பகலவன் முகம் காட்டி மிக
ஒளி கூட்டி சுகம் கேட்கிறான்.
காலைத் தேனீர் பருக – பேழையும்
இல்லைஇ பானையும் இல்லை
ஊற்றுவதற்கு ஆளையும் காணவில்லை
நிற்பதற்கும் நேரமில்லை யாது செய்ய?
அங்குரார்ப்பணம் அதிபர் துணிந்து
ஆரம்பிக்கவே அருகில் நிற்கும்
அறுவர் சூழ்ந்து நிற்கவே எடுபிடி வேலைக்கு
நிழாம் சைப் முபஸ்ஸிர் நானும் நிற்கவே!
பானையடுப்பு குவளைநெருப்பு யாவும்
ஜமாத்தாரிடம் வாங்கி முடிக்கவே
வீதியில் தேனீர் குடிக்கவே
பசி தாகமோ? ருசி வேகமோ?
தேனீர் கோடி ருசி – அந்தத்
தேனீரில் நாம் இரண்டு குவளை
குடித்ததும் ஊற்றிய அதிபருக்கோ
நெஞ்சம் எங்கும் குஷி
வெகு தூரம் வெகு வேகமாய் போகையில்
பாம்பொன்று எழுந்து படமெடுப்பதுவாய்
பாதைப் பாம்பும் எழுந்து படமெடுப்பது
போல் தெரியவே – எட்டிப் பார்க்க
எழுந்து நிற்கும் சங்குப்பிட்டி பாலமதில்
பவனி நடை பேணி வந்தோம்.
வேகாத பருப்பும் வெதும்பாத பாணும்
உண்டு உண்டே நா வெந்து தவிக்கிறோம்
ஒரு மாற்றத்திற்கென சைவக்கடையின்
சமையல்களை சுவைப்போம் அதனால்
“அம்மாச்சி அம்மாச்சி” என
அடிக்கடி ரஜாயி ஆசான் சொல்ல
வேண்டுகோள் ஏற்று வேண்டித் தின்பது
தோசை எனத் தீர்மானித்து
விஷ்னுபவன் கடை போனோம்
அங்கே இருப்பவர்கள் நடைபிணம்
எம்மை கண்டு கொள்ளவே இல்லை.
இஞ்சித் தேனீர் இருபத்தைந்து ரூபாய்.
விளம்பரம் வெளியே தெரிந்தது – ஊற்று
என்றோம். இஞ்சியே இல்லை இனி
எப்படி இஞ்சித் தேனீர் என்றான்.
சரி வேறென்ன தருவாய் என்றோம்
வெறுந்தெனீர் என்றான் - மூன்று குவளை
கொடு என்றோம் முதல் குவளை
முகர்ந்துவிட்டு வேண்டாம் என்றார் முபஸ்ஸிர்
யாழ் வெயிலில் உலர்ந்த வாய்
நனையட்டுமே என பருகினோம்
ஆகா! என்ன சுவை? எத்தனை சுவை?
பருகிய ஒரு மிடரை உமிழவா?
இல்லை விழுங்கவா? விழுங்கினால்
வயிறு வலிக்கும் உமிழ்ந்தால் முன்னே
உள்ளவன் முகத்தில் தெறிக்கும்
வாங்கிய பழிக்கு பருகி முடித்தோம்.
ஆண்டாண்டாய் இருந்த கிணறு
ஐதீகங்கள் நிறைந்த கிணறு
பல்லாண்டாய் பேர்பெற்ற கிணறு
ஆழமறியா பாதாளக் கிணறு
ஆனால் அண்மை ஆய்வில்
ஐம்பத்திரண்டு அடியென்று கண்டாராம்
அத்தனை ஐதீகமும் அடியோடு
உடைந்தனவாம் - பின் என்ன அது
பேரதிசயக் கிணறு – எல்லாம்
பேய்த்தனத்தின் பெருங்கிணறு
நிலாவரைக் கிணறு.
அதன் பின் அருகில் அமைந்த
மண்டபத்தில் காலை ஆகாரம்
உண்ணலாம் என எண்ணி
உள்ளே போனால் நாய்கள்
நான்கைந்து நாவை தொங்கவிட்டு
நம்மை வரவேற்க – விரண்டோடி
காங்கேசன்துறை கடற்கரையில்
காலை உணவை மதியமுண்டோம்
பசிக் கொடூரம் மணற்திட்டிலும்
கிணற்று கட்டிலும் மரக்கட்டையிலும்
அமர்ந்து ஆறாப்பசியை ஆற்றி முடித்தோம்
இனி நீராட வேண்டும் எனும் தீராவாசை
தீர்க்க சூடும் ஆடைகளை சுருட்டி
எடுத்து புறப்பட்டோம் அங்கே
அனல் வெயில் கொழுத்த
மூளை உருகி மூக்கால் ஒழுக
நாக்கில் நீர் வற்றி தொண்டையடைக்க
கண்ணில் தீப்பற்றி புகை பறக்க
ஓடி வந்தோம் - நல் நிழல்
தேடி வந்தோம் - தலையை
மூடி வந்தோம் - கோர வெயிலால்
வாடி வந்தோம் - அம்;மாடி
வேண்டாம் இந்த அபாயக்
குளியல் கொஞ்சம் குறையட்டுமே
கொடூர வெயில் என்றே
வந்த வழி திரும்பினோம்.
இனி வரும் வழியே திராட்சை
தோட்டங்கள் கண்டு கொடியில்
குலை இருக்க அதை கரங்களால்
கொய்து பறிக்க பின் உண்டு சுவைக்க
அதை கண்டு ரசிக்க வேண்டும் என்றே
அதிபர் மனம் ஆசை கொள்ள
அங்குமிங்கும் அலைந்தோம் - கடைசி வரை
கொடி முந்திரிக் குலையிருக்கும்
சோலை எதுவுமின்றி சோகமுடன்
வீணாய் சுற்றி வந்தோம்
ஜும்மா தினம் சும்மாவென்றே ஆனது
அதே ஜும்மா நேரம் காளி கோயில்
எங்குமே காhணாத மயில் கண்டு நின்றோம்
மாண்டு போன மாடொன்றை தோண்டிப்
பார்க்கப் போனோம் - பள்ளி செல்லும்
நேரம் கோயிலில் பள்ளி கொண்டோம்
பக்கத்தில் புனிதக் கேணி உண்டாம்
வாரும் காண்போம் என்றார் பலர் - சரி
பார்ப்போம் என்றே போனோம். அது பாசி
பிடித்த பாழுங்கிணறு அதைக் கண்டே
என்மனம் ஆக்ரோசத்தில் அனைவரையும்
ஆட்சேபித்தது. அவ்வேளை மூளை
கொதித்து முதுகில் புகைந்தது.
நெடுந் தூரம் போய் படும்
அவஸ்த்தை பட்டு பகலுணவை
மண்கும்பான் பள்ளியில் உண்டு களித்து
நீராட்டத் தீரா வேட்கை தீர்க்க
யாழ்நகரின் ஆழ்கடல் சூழ் மண்கும்பான்
கடற்கரையில் கூளங்களுக்குள் புகுந்து
கடலுக்குள் நுழைந்து நீந்தி வளைந்து
பந்து எறிந்து ஓடி விளையாடி நீராடி
கொண்ட கோபம் தீர்த்தோம்
அதன்பின் மாபெரும் யாழ்
நூலகம் போய் வாயிலில்
நின்று வாய் பார்த்து
வந்து சேர்ந்தோம்.
எல்லாம் முடிந்து இறுதியாய்
றியோ குளிர்களி மனை போய்
கனநேரம் வரிசையில் நின்று
வாகான குளிர்களிகள் வாங்கி
உண்டு முடித்து பேரூந்தில் புறப்பட்டோம்
மீண்டும் சங்குப்பிட்டி தள்ளாடி வழியே
முருங்கனும் வந்தது கடையில் முட்டை
ரொட்டி சுமந்து முட்டுக்கட்டை இட்டு
முற்றுப்புள்ளி வைத்தேன் முடிந்தது சுற்றுலா.
முற்றும்
2019.09.13








No comments:
Post a Comment