Wednesday, 10 July 2019

அறப்போர்

ஆலயங்களில் கூடி சனத்திரள்
பலசேர்த்து ஆகமங்கள் நெறி பேணி
உற்சவங்கள்  நடாத்தும் வேளை  உள்
நுழைந்து உள்ளங்கள் பன்னூற்றை
சிதறடிக்கும் வண்ணம் கொண்டு வந்து
குண்டு வைத்தால் குறுக்கு வழியில்
சுவர்க்கம் புகலாம்


சாந்தி மார்க்கம் சாராத பலரை
சற்றேனும் கனிவு காட்டாது
சாகடித்திடில் சுவனம் புகலாம்.
எங்கோ எவனோ படு பாதக
கொலை புரிந்த தற்காய் எங்கோ
இருக்கும் குழந்தைகளை கொன்று
பழி தீர்க்கையில் சுவனம் புகலாம்.



இவை யெல்லாம் கேட்கையிலே
தலை சுற்றி மூளை கரைந்து
மதி கெட்டோர் போக் கென்று
புரியாதோ பேதையனுக்கும்.

இதனை இஸ்லாம் எனச் சாற்றுவோர்
சற்றேனும் சாந்தி மார்க்கம் கற்றார்
இல்லை  என்று எருமை கூடவறியும்
ஏனிந்த ஏழறிவு எருதுகளுக்கு புரிவதில்லை

போர் எங்கு புரிய வேண்டும்
போர் யார் புரிய வேண்டும்
என்று அண்ணல் நபிவாலோ சனைகள்
ஆயிரம் இருக்க ஏதேதோ பிதற்றி
ஏதேதோ செய்வதென்ன எருமைத்தனம்????

எம்மைக் கொல்ல பொருளைக் கொள்ளை
கொள்ள எம்மாதர் மானம் பறிக்க
எம்முடைமை  சூறையாட எவன் வந்தாலும்
அவன் மேல் போர் செய்ய அனுமதியுண்டு

அப்போரும் பகைவர் துவக்க அதனை
தடுக்க நாம் செய்வதே புனித போர்
அதுவன்றி பிறிதொரு போர் எம்மா நபி
எமக்கு எடுத்து ரைக்கவில்லை

அறம் காத்து மறம் நீத்து
தர்மம் பேணி போர் செய்தல்
எம் கடமை – கடமை தவறின்
மடமை எம்  உடமை யென்றாகும்

அறப் போரில் அன்பே மிகைக்கும்
மறப் போரில் மண்டை மிதக்கும்
ஆயுதம் தரித்த ஆடவரை தடுக்கலாம்
மாதரையும் பாலரையும் மூத்தோரையும்
காத்திடல் தர்மம்

பிணியேறி பதை பதைப்போரையும்
போரிற் பங்கேற்கா தோரையும்
பகைமை பாராட்டாதோரையும்
கனிவோடு காத்திடல் தர்மம்

வயல் வெளிகளை விளை நிலங்களை
கயல் மனைகளை தழை மரங்களை
அயல் விலங்குகளை சிலை கற்களை
துவம்சம் செய்தல் அதர்மம்

போரிற் பகைவர் புறங்காட்டி
பயந்தோ டுகையில் தொடர்ந் தோடி
துரத்தாமல் அவரை கடந்து போதல்
போர் தர்மம் ஆகுமே

போரிற் பிடிபட்டோர் கைவிலங்கு மாட்டி
தெருவினில் இழுத்து வரல் அதர்மம்
சிறைப்பட்டோரை உதைக்காமல்
வதைக்காமல் சிதைக்காமல் உணவளித்து
உறையுள் வழங்கள் தர்ம்ம்

சரண் புகுந்தேரை ஏற்று அவரை
அரண் போல் காத்து அவர்
திறன் கண்டு அதை எம்மவருக்கு
கற்பிக்கச் சொல்லல் தர்மம்

இன்ன இன்ன போர் தர்மங்கள்
பெருங் கடலாய் நபிகளார் பறை
சாற்றி இருக்கையில் - அதர்மத்தின்
வழி நின்று அநியாயக் கொலைகள்
செய்து அதன்பின் அதனை அறப்போர்
என்றால் அவன் மதங் கொண்ட
மனித விலங்கு அவன் கையில்
இடவேண்டும் சிறை விலங்கு.





அறப்போர் என சாற்றி
மறப்போர் புரிவார் பலர்
பிறப்பால் மனிதர்கள்
சிறப்பால் சிறுகுரங்கென்றுமாகார்.







No comments:

Post a Comment