Sunday, 16 June 2019

பயணச் சிறப்பு (எலுவன்குளம் ஊடாக புத்தளம் மன்னார்)

மூன்றடி நகர்வதற்குள்
முப்பது குலுக்கம் முள்ளந்தண்டு
மூன்று துண்டாய்
முறிந்து வலிக்கும்

சிறுகுடல் சிதறி இருக்கம்
பெருங்குடல் பிதுங்கி இருக்கும்
இதையம் இடமாறி இருக்கும்
இடுப்பு இருகூறாய் பிளந்திருக்கும்

விலா எலும்பு விலகி இருக்கம்
மண்டை ஓடு மடிந்து இருக்கும்
மூட்டுக்கள் முட்டி மோதிச்
சண்டை பிடிக்கும் - தசைகள்
கிழிந்து கிடக்கும்

இதெல்லாம் வில்பத்து வீதிப்
பேரூந்து பயணத்தில் நடக்கும்
செந்தூசி பறக்க எம்நாசி அரிக்க
சிகை முடியெங்கும் செந்தூசி படிந்து
சந்நியாசி போல் நாமிருக்க
நம் பயணம் தொடரும்

குன்றும் குழியும் சாணுக்கு சாண் இருக்க
குழிக்குள் சில்லிறுகி பேரூந்து சாய
சட்டென்று முன்கம்பியில் முகம்
பட்டு முன்னம் பல்லுடைய

அதைச் சமாளிப்பதற்குள் அருகில் உள்ள பை
அவிழ்ந்து விழ உள்ளுள்ள பொருள்கள்
அங்குமிங்கும் ஆட்களின் காலிடையே அலை
மோத – அதையள்ளி பைக்குள் திணித்து முடிக்க

சாளரத்தின் வழியே
கா மரத்தின் முள்
முகத்தை கிழிக்க
தூசுதட்ட மூக்கில்
கட்டிய துணியால்
சொட்டும் செந்நீர் துடைத்திட

பின்னால் பெருஞ் சத்தம்
பெரியவர் கடைசி ஆசனத்தில்
பூமிக்கும் வானுக்கும் இடையே
அந்தரத்தில் ஆடிக்க களித்து
அரையுயிராய் இருக்க

வழியிடையே வேழங்கள்
வழிமறித்து கோலங்கள்
காட்ட – வேழம் பார்த்து
சிறாருக்கும் காட்டி கொஞ்சம் 
காட்டுக்குள் தாமதிக்க

பாட்டுக்கு ஆடும் பையன்கள்
ஆடிக்க களைத்திருக்க அவருக்கு
பதிலாய் பேரூந்தே ஆடி முடிக்க
எல்லோர் எலும்புகளும் கலகலக்கும்

வழியிடையே வழிமறித்து
முப்படை பரிசோதனை
ஆளை இறக்கி காலைத் தடவி
மேலைத் தடவி கீழைத் தடவி

குல்லாக் கழற்றி ஜூப்பா உதறி
தொப்பை குலுக்கி பையெல்லாம்
கிளறி  பலநுறு வினாத்தொடுத்து
விளங்கா மொழியில் பதில் சொல்லி
விடை பெற்று வீடு வந்து சேர்கையில்
தோழன் அயாஸ் கிடைத்தான்


வீடு வந்து வீட்டு வைத்தியரை
மேலெங்கும் தடவி காலெங்கும் உருவி
நாளன்று துயின்று நாளங்கள் தளர்ந்து
மீண்டும் பழைய நிலைக்கத் தேற
மாதங்கள் ஆகும்.

பயணத்திற்கு நாளொன்று போதும்
பயணிக்கு மாதங்கள் வேண்டும்
பட்ட சேதங்கள் ஆற அதற்குள்
மீண்டும் பயணம் எப்படியும்
சடலம்தான் வந்து சேரும்.

கா - காடு







No comments:

Post a Comment