Sunday, 23 December 2018

உலப்பனை

எழில் மலை மேடு
மலை வளை வெங்கும்
சிதறிக் கிடக்கும் வீடு
சிந்தை யெங்கும் நிறைந்தது
உலப்பனை மலை நாடு

சுற்றி வர விருட்சம்
அதை பற்றி ஏறும்
கொடி மிளகு அதில்
முற்றி விழும் முத்து
மிளகு வித்து மிளகு
வீழ்கையில் எத்தனை யழகு

சூழப் பெருங் காடு
வாழச் சிறு வீடு
கூரை குளிர் ஓடு
அருகில் குருவிக் கூடு
கொண்டதெம் அனஸின் வீடு
விரண்டோடும் வேண்டாச் சூடு

சாறல் மழை தூறல் வீழ
சாரல் மலை நீரெல்லாம்
தவழும் ஊரெல்லாம்
வீட்டுக்குள் சுருங்கும்

காலை என்ன
மாலை என்ன - போன
வேளை எல்லாம்
நாளெல்லாம் முகமன் தூவி
அழைக்க அனஸின் அன்னை
அவர் எமக்கும் அன்னைதான்;

உறைப்பென்ன ? புளிப்பென்ன ?
இனிப்பென்ன ? அறுருசி ஆகாரம்
அளித்து எமக்கு கடும் பசி
போக்கினார் எங்களன்னை

உண்டு முடித்து பின்
கதைத்து மகிழ நல்லவை
பல நடந்தவை கண்டவை
கேட்டவை எமக்குச் சொல்ல
நல்லதொரு பேச்சவை
பேச்சவையின் மூச்சதுவே
அனஸின் தந்தைதான்

துணையிழந்து மதியிழந்து
வந்து வீட்டில் விழுந்த
குருவிக் காயத்துக்கு
மஞ்சளரைத்து மருந்தமைத்து
பூசி  வளர்த்த புண்ணிய
அன்னையே நீர் பட்சிக்கு
உயிரளித்தீர் எமக்கு
உணவளித்ததை யாதென்று
போற்றுவேன்.

காடு மலை நதிகளில்
ஓடும் போதும் - ஆனந்தத்தில்
ஆடும் போதும் - பட்சிகள்
பாடும் போதும் அழகெத்தனை
கூடும் போதும் நண்பர்
நாம் நட்பெத்தனை

ரஜாப், ரிகாஸ், பஸ்லி
அனஸ் என்ற நட்புகள்
ஒருங்கிணைந்து தெருவில்
அலைந்து - நீரோடையில்
நனைந்து - காணுமிடங்களில்
படமெடுத்து பாதையெங்கும்
கதை அளந்து போக்கிய
பொழுதுகள் பொன்னேட்டில்
பொறித்த புனித சாசனமாய்
மகுடத்தில் பதித்த மணியென
மனதில் மின்னுமே!

பயின்று துயின்று
புசித்து ருசித்து
ரசித்த நொடிகள்
முன்னெங்கும்
சுவைத்ததுமில்லை
பின்னெங்கும்
சுவைப்பதுமில்லை

No comments:

Post a Comment