யாரோ எவரோ என
ஊரோ அறியாத அம்
மனிதர் பேரோ! இஸ்மாயீல்.
சீரோ சிறப்போ சேராது
சீர்வரிசை சிறப்புற செலுத்தாது
சீரிளம் மங்கை யவளை
மணந்தார் அம்மனிதர்.
உளத்திலே கனிவுக் குளத்தையே
விரித்தவள் கண்ணவனை
கண்ணென காத்திடும் கண்ணிய
கன்னியவள் பெயரோ! ஷரீபா.
மணந்து ஆண்டுகள் ஐந்து கடந்தும்
மனத்தில் மாறாக் கவலை நீறினுள்
நிறைந்த நெருப் பெனக் கனல,
நெருப்பே ஆறெனப் பாய்ந்ததுவே
பிள்ளை பெற்றாரல்லோ பெற்றோர்
பிள்ளைப் பேறில்லா மற்றோரை
பெற்றோரென்று புகல்வது பொருட்
குற்றமாகுமே – பேறில்லாதவரை மலடு
என்றே மனுக்குலம் அழைக்கும்
பிள்ளைப் பேறில்லாப் பெருங்குறையை
தொலை தூரம் கடந்துவந்த மகானிடம்
சொன்ன வேளை திருவாயருளினார்
செல்வம் பிறக்கு மென்று
ஐந் தாண்டு தவத் தாரகை
முதற் புதல்வன் உதித் தான்
உதித்த சில நாட்களில வாய்;
பதித்தருந்த தாய்ப் பாலில்லை
பாலூட்டும் தாய்க்கு போதும்
ஊட்டமில்லை யாது செய்ய?- மன
வாட்டங் கொண்டு தோட்ட மெங்கும்
இறை நாட்டத்தை நம்பி இரை
தேட்டத்தில் தந்தை இஸ்மாயீல்
சிக்கியது சிறு பலாக்காய்
எடுத்ததை கரம் ஏந்தயிலே
பாதிக்காய் பழுது மீதிக்காய்
பகலுணவு – சிதிலத்தை
செதுக்கி ஒதக்கி விட்டு
எஞ்சியதை சமைத் துண்டதில்சந்தோசம் வந்தமர்ந்தது
பையன் நளீம் பயிலும் பருவம்
படிப்பை தொடரும் தருணம்
இடையறாது படிக்க பணமிலா
இடையூறு இடைநடுவே தடை
போட இடைநிறுத்தினான் படிப்பை
ஐந்தாண்டு கழிந்து
உதித்தவனல்லவா அவன்
ஐந்தாண்டு கழித்தே
அறிஞனும் ஆனான்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதிலும் இளமையில் வறுமை கொடிது
எனும் ஒளவை வாக்கு உருப்பெற்று
தரிசனம் தந்தது என்னவோ? திடயுவன்
நளீமின் வாழ்வில் தான்
தொழில் ஏதும் செய்தால் ஒழிய
தொல்லை தரு வறுமை அகலாது
தொல்லை தினம் அகலாத வரை
தொலைந்த வாழ்வு மீளாது
பெற்றோரை காக்கவேனும்
பெருஞ் செல்வனாக விட்டாலும்
வரும் பசியை போக்க வேனும்
ஒரு தொழில் செய்தாக வேண்டும்
தொட்டான் தொழி லொன்று
பட்டை தீட்டினான் பவளமதை
பட்டை தீட்டும் போதும் கல்லை
காணும் போதும் சொல்லிடுவான்
முத்திது மரகதமெது? வென்று
நவ மணியும் அறிந்து
நவயுக வர்த்தக மறிந்து
தவப் புதல்வன் நளீம்
அவதரித்தார் தரணி
உவக்கும் மாணிக்க
வாணிபரென்று
மனிக் கணக்காய் தினம்
மணிக் கற்கள் அகழ்ந்து
நொடிக் கணக்கில் விற்று
கோடிக்கணக்கில் பெற்றார்
செல்வ மெல்லாம் வந்து சேரவே
செங்கையானது செல்வ மெங்கும் வீசவே
சிந்தை யெங்கும் இறைபக்தி தூறவே
செல்வச்செருக்கு சிரமிருந்து தாளிறங்கி
கழிநீர் காணில் குதித்ததுவே
தாய் நாடு தடம்புரளுமாம்
தடுமாற்றம் தலைவர் விழியில்
தெரிய – தயிரடைப் பானையில்
ஓரகப்பை அள்ளி வைத்ததுபோல்
மூவைந்திலட்சம் பொத்தி வைத்தார்.
நிதியில்லா நிர்வாக அரசு
நவின்றது நன்றி
உதவிக்கு உபத்திரம்
பிரதி உபகாரம் தந்தது அரசு
செல்வச்செம்மல் சென்றார் சிறை
நால்பத்தேழு நாட்கள் நின்றாரங்கே
நாணயம் தவறா நாயகன்
நம்மெல்லோரின் நன் மனிதர்
நளீம் ஹாஜியாரை நல்லவர்
என்றது நீதி மன்றம்
கறையேதும் கரத்தில் படியாமல்
இறையாலயம் பலதளத்தில் அமைத்தார்
மறைபோல் வாழ பூமியில் நினைத்தார்
முறைமீறி குறைகூறவரை யார்தானிருப்பார்?
இம்மையில் உழைத்து
இம்மையிலே விதைத்தார்
மறுமையிலதை விளைவிக்க
மறுமையில் ஈசனுக்கு
அண்மையில் குடியிருக்க
ஈடிலா விலை தகு
கலைகள் பல கொணர்ந்து
கலை பயில் மாணவர் பல
துறையில் அறிவு பெற
அமைதத்தார் ஒரு அறிவுக்காடு
எலிசபத் அரசிக்கொரு பெறுமதியை
கணிக்காது வெகுமதியளித்தார் - வானத்து
வரும்மதியல்ல நளீம் வாகனத்தில்
வரும்மதியென ஞாலத்தில் நிலைத்தார்
நளீமியா நந்த வனத்தை
நமக்களித்தார் அங்கே
கவிபாட களம் களியாட நிலம்
விளையாட மைதானம்
நடமாடப் பாதை
அறிவுப்புடம் போட வகுப்பு
உலவித்திரிய மரத்தோப்பு
கண்டு மகிழ வனத்தோப்பு
வணங்க பள்ளிவாயல்
நூல் நுவல நூலகம்- எண்ணக்
கொள்ளாதெம் நினைவகம்
சரித்திரத்தில் பலநூறு
சாதனைகள் செய்தோருண்டு
ஆனால் உம்மைப் போல்
மேதினியில் யார்தானுண்டு?
மண்ணறையில் துயிலும் மாமனிதரே
கொஞ்சம் கண் திறந்து பாரும்
பொன்னறையாகி இருக்கும் நீர்
செய்து வைத்த தவத்தால்.


No comments:
Post a Comment