Tuesday, 7 February 2017

காடு

#காடு
#ஜயமோகன்
மிக விறுவிறுப்பான பொறுப்பான நாவல்.
பின்னவீனத்துவ நாவல்,நான் வாசித்த நூல்களிலே நீண்ட கால ஆயிடையை பறித்துக்கொண்ட பனுவல்.இஃதனை வாசிப்பதற்கிடையான தருணங்களில் இரு புத்தகங்களை படித்துமுடித்துவிட்டேன்.

இந்நூலை வாசிக்க தனியான #எருமைப்பொறுமை தேவை நிதானம் தேவை நீண்டநேரம் தேவை எல்லாவற்றையும் நீங்கலாக பேரார்வம் தேவை. இவையனைத்தும் இருந்தாலும் தமிழில் நின்றும் கிளைத்த மொழிகளுல் ஒன்றெனச்சொல்லும் #மலையாளம் சொற்பளவேனும் அறிந்திருத்தல் வேண்டும்.

இந்நூல் அல்லது இந்நாவல் ஐந்திணைகளுல் ஒனறான மலையும் மலைசார்ந்த #குறிஞ்சி நிலத்தினை அடியாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.இன்னும் அதன் மருங்கில் முல்லையையும் பிணைத்தே புனைந்திருக்கிறார் நாவலாசிரியர் ஜயமோகன்.

நாவலின் கதைப்பாணி அல்லது கதைப்போக்கு கதையொழுங்கு என்பன மிக சுவாரஷ்யமாக இருக்கிற அதேவேளை வாசகனை மிக குழப்புவதில் குறியாக நிற்கிறது.இஃதனை அரைப்பங்கு அல்லது கால்,முக்கால் பாங்கை வாசித்துவிட்டு கதையினை புரிந்துகொண்டுவிடமுடியாது.முழுவதையும் முழுமூச்சாக பெரும் பிரயெத்தனம் எடுத்து முக்காரமிட்டு வாசித்தாலே ஒழிய எளிதில் கதையினை புரிந்து கொள்ளமுடியாது.

இன்னும் கதையின் சிக்கற்றன்மை நாவலாசிரியரின் கற்பனைத்திறத்தையும் வளத்தையும் கதையின் கதொயோட்டம்,கதைத்திருப்பு முனை என்பவற்றை மிக வடிவாகவே வடிவமைத்துவிடுகிறது.

நாவல் வாசகனின் உள்ளத்தில் நித்தம் நித்தம் கதையில் வருகின்ற #நீலி எனும் கதாப்பாத்திரத்தின் ஊசலாட்டத்தையும் கதை முதற்கொண்டு முடிவரை என நாவல் முழுவதும் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.மேலும் மலைப்பாங்கான குறிஞ்சி நிலத்தில் மலைச்சாதியினர் பற்றியும் மலையின் அழகு, மலையில் வாழும் மாதின் அல்லது மாதர்களின் அழகு மரங்களின் அழகு,அடவி புடவி தடவி ஓடும் அருவி அழகு.

மலையாளத்தில் #மிளா எனவழைக்கப்படும் #மரையழகு, மானழகு, மலையர்களின் மனையழகு, மலையனின் மகளின் அழகு,அங்கு வாழும் மங்கையரின் கற்புநெறி தவறி கற்பியலை மறந்து களவியலை கைவரப்பெற்று கண்டவரோடு கூடும் களவியல் வாழ்கை என்று இன்னும் பல யதார்த்தமான ஆனால் ஒழுக்ககேடான நெஞ்சம் ஏற்க மறுக்கும் குறிஞ்சி நில வாழ்வையும் காட்டு சஞ்சார வாழ்வையும் அழகாக மனக்கண் முன் ஓவியப்படுத்துகிறது #ஜயமோகனின் #காடு எனும் இந்நாவல்.

இபபுத்தகத்தில் ஒரு முதிர்ந்தவனின் கடந்தகால நினைவுளில் நிழலாட்டங்களிலும் அவனது இளமைக்கால மனவோட்டங்களும் கனவுகளின் கங்கைகளிலும் கற்பனை காமக்கடலிலும் காட்டு மரங்களின் மலரிடைகளில் மறைந்து மலையர் மாதொருத்தியை #கைக்கிளையாக_ஒருதலையாக கனநாட்கள் காதலித்து பின் அவளும் அவனை காதலித்து ககனமழைபொழியும் பொழுது ஒன்றாகவே நனைந்து பழகி குதூகலித்து பின்னாட்களில் அவளொருபிணியில் இறக்க அவளையடையாமல் அழுது தொலைக்கும் அவல நிலையை ஆழஅகலமாக விளக்குகிறார் நூலாசிரியர்.

இதனைக்கடந்து  கதாநாயகன் மலையகத்தில் மாமாவின் #கன்ட்ரக்ட் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு மாமாவின் பின் அவன் அதனைத்தொடர்ந்து செய்து நஷ்டமடைந்து ஓட்டாண்டியாகி ஊரில் திருமணம் முடித்த பிள்ளைக்கும் மனையாளுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கொடுக்காமல் மண்ணைக்கவ்விய வாழ்வும்.அதனூடாக அவன் குடும்ப வாழ்கையில் ஈடுபடுவதை விட கட்டற்ற காளை என்று சொல்லுவதை விட "கட்டாக்காலி நாயாக கழிசடையாக காடுமேடெங்கும் வீதியளப்பதே வாரந்தோறும் வாடிக்கை " என சொல்லுமளவுக்கு அவனது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்நாவலில் வரும் ஆடவர்களின் அதிகமானோர் பொருளீட்டுவதற்கடுத்ததாக பெண்ணீட்டுவதாகும். காணும் கன்னியரை காமக்கனவுகளோடு கண்டு கண்டு பெண்களை களவியல் வாழ்விற்கு உற்படுத்தியவர்கள் இந்த ஆடவர்களே.
இவ்வாடவர்களிடமிருந்து தப்பினாலும் காட்டில் கன்ட்ரக்ட் கொடுக்க வரும் வெள்ளையர்களிடம் இருந்து தப்புவது கல்லில் நாருரிப்பதாகவே தோன்றும்.
அதனையும் மீறி பிழைக்கவழி ஏசுகிருஸ்து சிலுவையை #குரிசை கழுத்தில் மாட்டிக்கொண்டு வெள்ளையனிடம் மாட்டாமல் இருக்கலாம்.ஆனால் ஆயுள் முழுதும் ஆண்வாசனையை நுகராமாலே சாகவேண்டியதுதான்.

அந்த குறிஞ்சி நிலத்தில் பெண்ணை உறுஞ்சி எடுப்பர் 1:4 எனும் விகிதத்தில் ஒருத்திக்கு நால்வர்.அல்லது கன்னியாஸ்திரி அவளுக்கு ஒரு ஆணுமில்லை.ஆக இங்கு களவியலும் துறவியலுமே உண்டே ஒழிய ஒழுக்க நெறிகொண்ட கற்பியல் கிடையாது.

இதனாலாயே இந்நாவலில் கிருஸ்தவ மத அழைப்பும் மதமாற்றம்நிகழ்வதையும் மலையர் இனம் அழிவதையும் காடழிக்கப்படுவதையும் சூக்குமமாக நாவாலாசிரியர் பாத்திரங்களின் கதைப்பாங்கின் மூலம் நவில்கிறார்.

இதற்கப்பாலும் அரசாங்கத்தாலே காடழிக்கப்பவதும் மீண்டும் அழிக்கப்பட்ட காடுகளை கணக்கிட்டு ஆவணப்படுத்திமீள்காடாக்கம் பற்றி சிந்திப்பதும் எந்தளவும் மண்டையில் களிமண்இருக்கிறது இவ்வரசாங்கதிற்கென்று நூலில் வாசகர்களுக்கு மறைமுகமாக ஜயமோகன் வினவுகிறார்.

இதெல்லாவற்றையும் கடந்து #சங்க இலக்கியமான #குறுந்தொகையிலிருந்து #கபிலரின் வரிகளிகனால் ஊடுருவி காட்டையும் மலையும் அங்குள்ளவையின் எழிலையும் கண்டு இரசித்த கலைஞனின் ஊடாட்டத்தையும் விளக்கியிருக்கும் திறமே தனித்திறம்தான்.இதனூடாக வாசகனையும் காட்டிற்கும் மலைக்கும் குறிஞ்சிக்கும் அழைத்துச்சென்ற அதேவேளை சங்ககாலத்திற்கு கையோடு கூட்டிச்சென்று கபிலரோடு கதைக்கவும் வைத்துவிட்டார் காட்டின் நூலாசிரியர்.

அத்தோடு நாவலின் மறக்வும் இழக்கவும் முடியாத பாத்திரங்கள் #குட்டப்பன்,#ரெசலாம், #குரிசு,#நாடார் ஆகியனவாகும்.குட்டப்பனின் கதை கண்ணுக்குள்ளே மறையாமல் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது.தேவாங்கை குழந்தையாக கொஞ்சி தேவாங்கோடு குரிசையும் மறந்துவிடல் அசாத்தியம்.சங்க இலக்கியத்தோடு அடிக்கடி சங்கமிக்கவைத்தவர் நாடார்.இன்னும் மூங்கிலில் அடைக்கப்ட்ட மலைத்தேன்,சீனிக்கிழங்கு, தேனீர்,கஞ்சி காட்டு யானை #கீறக்காதன் என்பன எந்நெஞ்சத்தை நெகிழச்செய்து மகிழச்செய்தவை.

இன்னும் இந்நூலில் ஜயமோகன் தாய்த்தமிழையும் தமிழில் இருந்து பிறந்த சேய் மலையாளத்தையும் ஒன்றாகவே உறவாடவிட்டு எழுத்து வழக்கையும் பேச்சு வழக்கையும் இரண்டற கலக்கவிட்டு யாத்தெடுத்திருக்கிறார்.
கருக்கொண்ட காடு காட்டையே ஈன்று நாவலாகிறது #காடு

No comments:

Post a Comment