Friday, 3 February 2017

சுதந்திர புத்தாண்டு

வாழும் சிங்களவரும்
ஈழத் தமிழரும்
இலங்கை சோனகரும்
நாளும் நண்பர்கள்
ஆளும் இலங்கையின் பங்காளர்கள்

நாம் வாழும் நம்
நாட்டை நமையன்றி
வேறார் ஆளவேண்டும்?
வேற்றார் ஆளுமுன்னே
நம்பகை மாள வேண்டும்

சிங்களமே ஒழிக!
தமிழினமே அழிக! -அறபு
வழிவந்தவனே மடிக -எனும்
ஆவேச வசனமழிக!
எம்பகை என்றும் மடிக!
நாளொரு சண்டை
பொழுதொரு முறுகல் விடுக!
நாமெல்லாம் ஒன்றாயெழுக!

வீரன் வீரபுரன் அப்புவும்
சூரன் பண்டாரவன்னியனும்
மேதை சித்திலெப்பையும்
இணைந்து பெற்றதென்ன?
போரிட்டு வென்றதென்ன?
நாட்டை மீட்டதென்ன?  -நாமிதை
மறந்துவிட்டு மூவினமும் முட்டி
மோதின்று செய்வதென்ன?

வீரமன்னனை வெட்டிக்கொல்ல
வெள்ளையன் வேவுபார்த்ததென்ன?
கண்டும் காணாமல் வேந்தனுயிர்
காத்து நின்ற மங்கை தன்னுயிர்
காவு கொடுத்ததென்ன?

வெட்டி வெட்டி கட்டி இரத்தம்
கொட்டி மட்டி போல் மண்ணில்
மண்டி கிடக்கையிலே -மன்னவன்
அவளை எட்டிக்கடக்கையிலே
கட்டியணைக்காக்குறையாய்
எனைக்காத்த இரத்தமென்றதென்ன?

கண்டிய மன்னவனை கண்டும்
காட்டேரிகளிடம் காட்டாத மாதின்
இனத்தவரை கண்டியை அண்டி
குடியமர்த்தியதென்ன?

அப்புஹாமியாய் இருந்தென்ன?
அப்பர்சாமியாய் இருந்தென்ன?
அப்துர்ரஹீமாய் இருந்தென்ன?
அப்பப்பா நாமெல்லாம் ஒருதாய்
பிள்ளையப்பா, நமக்குள் சண்டை
ஏனப்பா, அத்தனையும் வீணப்பா

பௌத்த பேர்வழியாய்
ஈழப்புலியாய் -ஐ. எஸ்
அறபுச்சுழியாய் எம் நாட்டை
அழிக்க வந்தால் விரட்டியடிப்போம்

யுத்தாசை நீக்கி
புத்தாசை தேக்கி
முத்தான எம் தேசத்தின் சுதந்திர
புத்தாண்டை கொண்டாடுவோம்

பட உதவி BestJMcreation (fasmin ja'afar) 

No comments:

Post a Comment