பூவைகொடு காதில்பூவையிடு
பூவைபிடி பாவைகெடு-வயிற்றில்
பாவைகொடு, சோலைக்கிளி
சேலைகிழி தேவைமுடி
சேயைபெறு நோயைபொறு
சேயினது தாயைஅறு தயைமறு
இன்னுமொரு நாயை தேடு
காம நோயை தீரு
காலமுழுதும் வாழுமுழுதும்
இங்கனமே நீயோடு
சூது வாது மாது தீது
வாயில் போதை ஊது
காதுமீது தீது இசை கேளு
கோதை போதையோடு கீதம்பாடு
களவு பிளவு பேணு
உணவு நலது தேனு
உண்டு முடிய உருண்டு
படுத்துறங்கிநீ கனவு காணு
வானிலவு தேனிலவு
பூநிலவு போய் நீஉலவு
வாநிலவே யென அழைத்து
நீ குலவு முடிந்ததும் அகலு
எதிர்த்து எவன் வந்தாலும்
கத்தியெடு குத்திவிடு
தள்ளிவிடு கொள்ளியிடு -துவக்கை
அழுத்திவிடு கொழுத்திவிடு
கேட்டால் இது என் சொத்து
என்முத்து நானுண்பேன்
விற்று, முதலில் நீ
வாய்பொத்து எனச்செப்பு
தோழாநீ ஒன்றை நினை
இவையாவும் நித்தியமில்லை
நீயிருப்பது சத்தியமில்லை
இறைவனுக்குன் வாழ்வில் பத்தியமில்லை
இத்தனையாட்டமும் எத்தனை
கொண்டாட்டமும், உன்பல்
ஆடும் வரை கருஞ்சிகை மறைந்து
கிழநரை விழுமட்டும் -கொழுத்த
கன்னம் குழிவிழுமட்டும் -இது
மட்டுமுன் நினைவிலிருக்கட்டும்
கையிரண்டு மெய்யொன்று
மையிரண்டு விழியுண்டு
பைமுழுதும் பணமுண்டு
நெய்துடுத்த நூலுண்டு -தேவன்
செய்துகொடுத்த வாழ்கையுண்டு
பெற்று வளர்க்க குழந்தை
பெற்று தர மடந்தை
கற்றுப்பயனுற நற்சிந்தை
மேய்த்து வளர்க்க மந்தை
தேவன் அமைத்த வழியில்
அனுமதித்த நெறியில்
வாழ்ந்து வந்தால்
அடங்கும் மானுட அகந்தை
இறை நெறிமுறை
இறை அறிதிருமறை
மறை வரைமுறை
குறிதவறாது பின்பற்றி
வாழ்ந்திடு இறுதிவரை
இம்முறை ஒருவகை சிறை
இதனடி நீ யிருந்தால்
களைந்தோடும் பாவக்கறை
இதுபோலின்பம் பேராயிரம்
உண்டு மறுஉலகில் பலமுறை
இரு உலகு உண்டு அதில்
ஒரு உலகு போலிநிற உலகு -
மறு உலகு அருள் பெறுமுலகு
மறுஉலகை மறக்கச்செய்யுமுலகை
மறு உலகை மற உலகை
அறு உலகை துற உலகை
பூவை -பூ+ஐ /பெண்
பாவை -பெண் /குழந்தை
சேய் -குழந்தை
தயை -அன்பு
சூது-சூதாட்டம்
வாது -புரட்டு
தீது -தீங்கு
மாது -பெண்
கோதை -பெண்
குலவு -உறவுகொள்
அகலு -நீங்கு
நித்தியம் -நிரந்தரம்
சிகை -முடி
மடந்தை -பெண்
அகந்தை -ஆணவம்
மறு -மறுத்துவிடு
மற -மறந்துவிடு
No comments:
Post a Comment