மா பழுப்பதும்
கோ தழைப்பதும்
ஆ உழைப்தும்
கா செழிப்பதும்
ஈ சன் செயலம்மா
ஈ பறப்பதும்
நீ இறப்பதும்
தீ பிறப்பதும்
சீ மறப்பதும்
ஈ சன் செயலம்மா
கோவை கவிழ்ப்பதும்
பாவை பூப்பதும்
பூவை காய்த்திட வைப்பதும்
நாவை சுவைத்திட வைப்பதும்
ஈசன் செயலம்மா
நேற்று பழம் தரும்மா
இன்று பழந்தரு மா
நாளை பழம் தருமா? -இல்லை
இன்றே விழுந்திடுமா
என்று எண்ணிடலாமா
யாவும் ஈசன் செயலம்மா
விலை ஏறுது பால்மா
பரிதவிக்கிறது பிள்ளைகள் ஆன்மா
என்று ஏங்கிடலாமா
எல்லாம் வீணம்மா
யாவும் ஈசன் செயலம்மா
படைத்தவன் வழிசமைப்பானம்மா
நாடு படை பரிவாரம்
பட்டாளம் கூடிவர
கோபுரமென கோட்டையென
வீடு கட்டினோர் எத்தனை பேரம்மா?
அத்தனை பேருக்கும்
ஊரவர் ஓராயிரம் பேர்
கூடிவந்து தேடிவந்து
நாலடி ஏழடி என அளந்து
குழி வெட்டினாரம்மா
பட்டுச்சேலை
கட்டினால் என்ன?-பறை
கொட்டி பேரிகை முழக்கி
பட்டாளமாய் போனால் என்ன?
ஈசன் எழுதிவிட்ட
தேதி வந்தே சேரும்
பாடை ஏறிவிட்ட பூதவுடல்
படுகுழி போய்த்தான் தீரும்
கடலாய் கண்ணீர் விட்டென்ன?
கல்லாய் சமைந்தென்ன?
கல்லறை போன சடலம்
நெல்லாய் மீண்டும் முளைப்பதில்லை
மகாகவி பாரதி எங்கேயம்மா?
மாவீரன் காஸ்ட்ரோ எங்கேயம்மா?
அறிஞர்குல முத்து அப்துல்கலாம்
எங்கேயம்மா?
ஆட்டிப்படைத்த ஹிட்லர் எங்கேயம்மா?
உலகிற் தோன்றிய உத்தமர்
எல்லாம் எங்கேயம்மா?
அதுசரி நேற்றிருந்த நீ
இன்றெங்கு போனாயம்மா?
மா -மாங்காய்
கோ -அரசமரம், அரசன்
ஆ -பசு
கா -காடு
ஈ -இலையான்
தீ -கனல்
சீ -வெறுக்கத்தக்கவை சீ என்னவேல்
பாவை -பெண்
தரு-மரம்
பழந்தரு -பழைய மரம்
No comments:
Post a Comment