வெண்முத்து நன்முத்து
பல்முத்து மெல்லச்சிரித்து
மேடையில் நின்று
மேசைபலகை பிடித்து
முத்துமுத்துச்சொற்கள்
கொத்துகொத்தாய்
அவிழ்த்து எம்
சித்தம் தெளிய
நாடு தழுவி நடக்கும்
யுத்தம் பற்றியும் நல்ல
தகவல்கள் என நித்தம்
எமக்கு சொல்லித்தந்த
புத்திஜீவி-எம்
அருஞ்சொத்தே
பெரும்முத்தே
சேரே அகாரே
நீரே சொல்மழை காரே
உம் வழி நேரே
உம் பின்னால் பெரும்பாரே
எம் சேரே எங்கள் அகாரே
நற்சுவை பொற்சுவை
பழச்சுவை பாற்சுவை
அறுசுவை முச்சுவை
அச்சுவை இச்சுவை
என உம் பேச்சினில்
எச்சுவை குறைந்தாலும்
என்றும் குறையாது
உம்நகைச்சுவை
பண்ணெடுத்து பாகெடுத்து
தேனெடுத்து தெவிட்டாமல்
பேச்சை தொடங்கி
பின்அடுத்து நெருப்பெடுத்து
வெறுப்பெடுத்து
பொறுப்பாய் பேச
உம்மை அன்றி
வேறெவரால் முடியும்
எம்மொழி நம்மொழி
செம்மொழி தமிழ்மொழி
கதைத்தாலும் பன்மொழி
பிறமொழி அறபு ஆங்கிலம்
சிங்களம் என எம்மொழி
நீர்கதைத்தாலும் உம்
கண்விழி கம்பீரமாய்த்தான்
காட்சி தரும்
காலைப்பொழுது
மூடுபனி மூடி
கவிந்து கிடக்கையிலே
கதிரவன் வந்து
பனிதனை கிழிக்காமல்
கிடக்கையிலே
நளீமியா நம்வனத்தில்
நந்தவனத்தில் நறுமணத்தில்
கருநிற குதிரையில்
கரமதில் வில்லேந்தி
முகமதில் மூடுதிரை அணிந்து
மூடுபனி கிழித்து
தங்கி நில்லாமல்
பொங்கியெழும் புயலாக வருவீரே
முகமது அகாரே
எங்கள் சேரே
உம் வழி நேரே
உம்பின் பெரும் பாரே
உம்சொல் நல் பன்னீரே
உம்பேச்சில் கொதிக்கும் செந்நீரே
சிலபொழுது வழியும் கண்ணீரே
சிலபொழுது நுங்குத்தண்ணீரே
ஒட்டுமொத்த உடல் பாரத்தையும்
ஒற்றைக்காலில் முட்டுக்கொடுத்து
ஒருஓரமாய் ஒருக்களித்து நின்று
ஒருகரம் காற்சட்டைப்பையினுள்
நுழைய மறுகரமெம்முன் வளைய
'என்னபாடம்' என்று நீர்
கேட்கும் கர்ச்சனையில்
நான் என்னை மறப்பேன்
ஒருநொடி உயிர் துறப்பேன்
கல்லாய் விறைப்பேன்-மறு
கணம் மீண்டும் நான் பிறப்பேன்
பற்கடித்து முறைத்துப்பார்க்கும்
உம்பார்வையில் நான்
விறைத்துப்போனாலும்- உம்மீது
உள்ள பெருமதிப்பும் பேரன்பும்
எம்முளத்திலென்றும் குறையாது
நீர்நகைக்கும் புன்னகைக்கும்
பொன்னகைக்கும் ஈடாக
முகைக்கும் பூக்கள்தானே
நகைக்கும்- நீர்நகைக்கும்
நகையில் பனிப்புகைக்கும்
கூதல் அடிக்கும் -உம்
நடைக்கும் அழகு சிகைக்கும்
வீரச்சிங்கங்கூட முறைக்கும்
நிரந்தரமாய் பகைக்கும்
பகைப்பாருக்கு உம் வாக்கு
போர்துவக்கு
நகைப்பாருக்கு உம் வாக்கு
நல்லபாக்கு
உம் உடல் வாக்கு
உம் முக மூக்கு
வீரப்பேச்சு நாக்கு
எல்லாமே வைரத்தேக்கு
நாமெல்லாம் நலமெல்லாம்
நம்மில் நடை பயில
நாளெல்லாம் நேரமெல்லாம்
நகைப்போடு கழிக்க -சடுதியாய்
நரம்பெல்லாம் விறைக்க
நாடியெல்லாம் புடைக்க
நாசியெல்லாம் மூச்சடைக்க
நொடிப்பொழுது கல்லாய் சமைந்தோம் -அகார் சேர் விபத்து
எனும் சொல்லில் கரைந்தோம்
அவருக்கு என்னதான்
நேர்ந்துவிட்டதோ
என்றெண்ணி எம் உள்ளம்
வெந்துவிட்டது நொந்துவிட்டது
எம் சேருக்கேதுமில்லை
நலமாய்த்தான் உள்ளார்
எல்லாம் நல்லதுக்கே அவர்
நல்லபடி உள்ளார் என
சொன்னபடி ஒரு அலைபேசி
அழைப்பில்லையே என ஏங்கினோம்
அலைபேசி அழைப்புக்கள்
அலைமோதின அகார்சேருக்கு
விபத்தாம் அசையா நெஞ்சங்கள்
அலைபாய்ந்தன
பேரிடி தலையில் விழுந்தாலும்
ஓரடி நகராத கல்நேஞ்சங்கள் கூட
நானூறடி உயரம் பாய்ந்தவன் போல்
நாடித்துடிப்பு மாறடித்தன
பாட்டி மரணித்ததும்
பாராமல் பக்கத்தில் இருந்து
பாற்சோறு தின்றவர்கள் கூட
பாதி எச்சில் விழுங்கவில்லை
நல்லவேளை அகார் சேருக்கு
ஏதும் பாதகம் இல்லையாம் என்றதும்-சொன்ன வாய்க்கு சீனி
அள்ளிபோடலாம்என்றெண்ணியபோது
சொன்னார்கள் எங்கள்
எல்லோரின் அன்னையாம்
யாரும் அவரை கண்டதில்லையாம்
இரண்டாம் ஹதீஜா அன்னையாம்
அகார் சேரின் அன்புக்கினிய
செவ்விளநீர் தென்னையாம்
விட்டுப்பிரிந்தார் மண்ணையாம்
அடைந்துவிட்டார் சுவனலொக விண்ணையாம்
என்று சொன்னதும்
எண்ணெய் ஊற்றி
கொழுத்திவிட்டது போல்
மேனி கொதித்ததுவே
கோடாரி கோண்டு
கொத்தி எடுத்து
இதையத்தை இரண்டாய்
பிளந்து நார்நாராய்
கிழித்து நெருப்பில்
வாட்டியது போல்
எம் நெஞ்சம் முழுதும்
கொஞ்சம் கொஞ்சமாய்
துக்கநஞ்சு பரவிற்று
போகுமிடமெல்லாம் போய்
வேகுமிடமெல்லாம் வெந்து
நோகுமிடமெல்லாம் நொந்து
ஆகுமிடமெல்லாம் ஆகி
புத்தாடை மடித்து அதில்
புத்தாடை கொடுத்து
பலமேடைகளில் பேசவைத்து
அகார் சேரை ஊரறிய
உலகறிய பேர்பெறச்செய்த
பெண்மணியே பத்தினியே
உம் மறைவுச்சேதி வந்ததும்
எம் நெஞ்சம் பற்றினதுவே
இத்தனையும் கடந்து
நிழற்படம் கண்டு
நிலை குலைந்தோம்
நில்லாமல் தள்ளாடினோம்
எங்கள் ஆசான் அகார் சேர்தானா இது என ஆடிப்போனோம்
வாடிப்போனோம்-அவர்
வீடுவரை தேடிப்போனோம்
ஒன்றாய் கூடிப்போனோம்
இரண்டாம் ஹதீஜா
உம் சொக்கத்தங்கம்
நாளை சொர்க்கத்தில்
உம்மோடு தங்கவருவார்
சோர்ந்தது போதும்
பொங்கி எழுங்கள்
உம் பேச்சின்றி பல
மேடைகள் மூச்சின்றி கிடக்கின்றன
அவற்றை உயிர்ப்பிக்க
மீண்டும் வீறுநடை போடுவீரே
உம் நாவீறும் நகைச்சுவையும்
பலபேர் செவிகளில்
அமுதை அள்ளித்தெளிக்க
திடம் கொண்டு வாரீர்
நீர்பதித்த தடங்களில்
இது ஓர் தடங்கல்
சரி விடுங்கள்- மீண்டும் பதியும்
உம் வெற்றி தடங்கள்
துணிந்வனுக்கு தூக்குமேடை
பஞ்சுமெத்தை
அகார் சேருக்கு அகப்பட்டது
எல்லாம் பேச்சுவித்தை
எம் சேரே எங்கள் அகாரே
உம் வழி நேரே
உம்பின் பெரும்பாரே
பொங்கி எழுந்துசொற்போருக்கு
போவீரே
ஆடி அடங்குது உள்ளம்
ReplyDeleteஉன் வரிகளில்
ஒரு துளிக் கண்ணீருடன் வாழ்த்துறேன்
நெருப்புடா...
ReplyDeletePattai mschn
உன் கவியடிகள் என் உள்ளம் தொட்டது அன்பா அமுது.
ReplyDelete