மெட்டுக்கட்டி
மொட்டுவிட்ட அவன் புன்னகையும்
பட்டுக்கட்டி
தொட்டுவிட்டு
நெற்றிப்பொட்டு போல்
கட்டிலில் அமர்ந்து-கரமொன்றை
கீழோ தட்டிவிட்டு
எட்டி எட்டி
இமை வெட்டாமலே
பார்க்கும் அவள் பார்வையும்
விரித்துவிட்ட கட்டில் பட்டுப்போர்வையும்
கட்டுப்பட்டே கிடக்கிறது
மழலை என்று சொல்லி
கைநிறைய அள்ளி
கன்னங்கள் கிள்ளி
வாழ்த்துகள் பல சொல்லி
வீட்டார் சேர்த்துவிட்டபோதே
அவனும் அவளும் சேர்ந்துவிட்டார்கள்
எல்லோர் வாழ்வும்
இளவயது தாண்டவே
இல்லாள் தேடுவதும்
இல்லாளன் தேடுவதும்
ஆனால் அவனும் அவளும்
எல்லை இல்லாமலே
பிள்ளை பருவமுதலே-காதல்
கள்ளை பருகிவிட்டார்கள்
காதல் என்று அது
புரிவதற்கு
பதினைந்து ஆண்டு போய்
இருக்கலாம்
அதுவரை அவர்கள் அறியாமலே
காதலர்கள் தான்
அதன்பின் அறிந்தேதான்
காதலர்கள்
விடலை பருவம் வந்ததும்
கடலை போட்டு
படலை தட்டி வீடுபோய்
கூடுபுனையும் கேடுகொண்ட
காதல் இதுவல்ல
நாடு போற்ற
வீடு போற்ற
கூடுவிட்டு கூடுமாறும்
அன்போடு கூடிய காதல்
மாந்தர் போற்றும்
மகத்துவக்காதல்
நாளை மறுமை வரை
நிலைக்கும் நீடூழிக்காதல்
சிலதருணங்களில்
சில மனமுறிவுகள்
வந்திருக்கலாம்-ஆனால்
மணமுறிவு வராது
தேனாக அவளும்
மானாக அவனும்
பண்ணாக அவளும்
கண்ணாக அவனும்
இவர் காதல் கலைந்தால்
விண்ணும் மண்ணும்
ஒண்ணாகும் இல்லை
தூசு மண்ணாகும்
என்றென்றும்
கன்றென்றும்
நன்றென்றும்-பார் போற்றும்
இவர்கள் நல வாழ்வை
சின்னவளாய் பாரு
கண்ணவனாய் ஜெயம்
மின்னவளாய் பாரு
மன்னவனாய் ஜெயம்
இருவரும் மணத்தினுள் விஜயம்
படலை-கதவு/கடவல்
கூடு-உடல்/மனம்
பண்-இசை
No comments:
Post a Comment