Friday, 7 October 2016

மாநாட்டுக்கவி

ஆகாது போன போதையினை
ஆகாரமாய் ஆக்கிவிட்டு
ஆகாயத்தில் ஆரோகணமாய்
ஆடித்திரிந்த ஆடவனால்

ஆயுள் முழுதெல்லாம்
அவமானப்பட்ட அழகு மாதின்
ஆவேசப்பேச்சால் ஆக்கிரமிக்கும்
அழகு கவி ஆக்க வந்தேன்

பஞ்ச சீலங்கள் எல்லாம்
கொஞ்சம் கூட குறையாத
அஞ்சா நெஞ்சன் ஒருவன்-ஆண்டவனுக்கு
அஞ்சுவதே தொழிலவன்

ஆடும் மாதரிடையே -போதையில்
ஆடவரும் ஆடவரையும்
ஆடவளோடு கூடா வழியில் கூடவரும்
ஆடவரையும் ஓடவைப்பவன்

புத்தி கொழுத்தவன்
முற்றிப்பழுத்தவன்-தொழுது
நெற்றி கறுத்தவன்
வெற்றிக்கு உரித்தவன்

எனும் நற்குணங்கள்
எங்கும் மணக்க நடந்தவன்
எனை மணக்க வந்தவன்
என்றே யான் அவனை மணந்தேன்

நான் அவனை மணந்தொரு மாதம்
நான் அவனை மறந்தொரு மாதம்
நான் அவனால் மனமுடைந்தொருமாதம்
நான் அவனை மனத்தால் வெறுத்தொரு மாதம்

மணமுடித்து மறு நாள்-என்
மாதர் தோழிகள் மனைக்கு வந்து
மனமார வாழ்த்தாமல்
மணந்தவனை மறந்துவிடு என்றார்கள்

மனமுடைந்து போனேன்-புது
மணப்பெண் என்னை
புகழ்ந்தோர் பத்தையும் தேறாது
இகழ்ந்தோர் பலநூறுகடந்தும் போதாது

மாப்பிள்ளை மாநகரத்தில்
மாதம் தோறும் வேலைபார்ப்பவர்
மாபாதக போதை பாவிப்பவர்
மனிதன்தானே மன்னித்திடு திருந்திவிடுவான்

இன்னொரு புறத்தில்
இங்கிலீசு பேசும் உன் மாப்பிள்ளை
இந்திய கஞ்சா பாவித்தவர்
இனி அதெல்லாம் தொடமாட்டார்

அறிவுக்கண் திறந்த உன் கணவன் அடங்காத கவலைகளில்
அடைத்த போதை மாத்திரைகளை
அருந்துவது வழமைதான் நாளாக அது சரியாகும்

நல்லவன் நமை மணப்பான்
வல்லவனாய் இருப்பான்
புல்லர்களை ஒழிப்பான்-போதை
வில்லர்கள் எதிர்ப்பான்

என்றல்லவா என் மனதில்
கோட்டை கட்டி கனவு கண்டேன்
கண்ட கனவெல்லாம்
கனவாய்த்தான் போய்விட்டதோ

இரும்பு போல இருப்பான்
இளஞ்சிங்கமாய் நடப்பான்
இனிய கணவனாய் இருப்பான்
இன்பங்கள் கோடி கொடுப்பான்

என்றெண்ணி இருந்தேன்
ஆனந்த தாண்டவம்
ஆடலாம் என்றெண்ணியிருந்தேன்
எல்லாம் பாழாய் போனது

கன்னியவள் கண்ணவனை
கண்டவுடனே கன்னங்கள்
சிவக்க, பல எண்ணங்களில் மிதக்க
அழகு வண்ணங்களாய் தெரிவாள்

ஆனால் நானென் கண்ணவனை
கண்டவுடனே கன்னங்கள் சுருங்கி
எண்ணங்கள் மழுங்கி
எச்சில் விழுங்கி ஏங்கி நிற்பேன்

எழுந்து நிற்க வக்கற்றன்
முதுகெலும்பில் முறிவுற்றவன்
மூர்க்கம் மட்டும் மூக்கில் கொண்டவன்
இடுப்பு இருந்தும் இடிந்து விழுந்தவன்

வெண்ணிற துகள்களையும்
மூக்கினுள் புதைத்தும்
நாக்கினுள் விதைத்தும்
மஞ்சத்தில் மயங்கிக்டப்பான்

ஆண்டவனை தொழாதவன்
ஆண்குலத்துக்கு அழுக்கானவன்
ஆண்மைக்கு அர்த்தமற்றவன்
விந்தில் வீரியமற்றவன்

பகல் முழுதும் பாதையெங்கும்
பவனி வந்துவிட்டு
அந்தி சாய அழகு தேய
அறையில் சாய்ந்து கிடப்பான்

இரவெல்லாம் பிணமாய் கிடப்பான்
இதயம் கொல்லும் துருமணமாயிருப்பான்
ஆனந்தமெல்லாம் வரும் என்றெண்ணிய
எனக்கு அவமானங்களே பரிசாகியது

கட்டியவன் பெயர் சொல்ல
கட்டிச்சுமக்கிறேன் வயிற்றில்
வெட்டிக்கொல்லவேண்டியவன்
நாமம் நாளை என்சிசுவுக்கு வரக்கூடாது

உருவாகி கருவாகி என்சிசு
எருவாகி இறந்தால்
நாளை குடிகாரன் பெயர்
உருவாகி வராது

சித்தம் கலங்க பித்தம் தலைக்கேறி
நித்தம் போதை அருந்தி
பித்து பிடித்து அலையும்
பித்தர்களே!!!!

சித்தம் தெளிந்து
சிந்தை திறந்து-தம்
சீத்துவம் என்னவென்று
சிந்தித்துப்பாரும்

தோட்டம் துறவு இருக்கலாம்
வாட்சாட்டமாய் இருக்கலாம்
ஆட்டம்பாட்டமாய் குதூகலிக்கலாம்
ஆனால் மங்கையவளை

மணந்துவிட்டு மனநிம்மதியும்
மனத்திருப்தியும் தரகுதியற்றவன்
தரணியிலே தரங்கெட்டவன்
மானுடர்குலத்தில் மானகெட்டவன்

குடிப்பாரும் வெறிப்பாரும்
மங்கைக்கு வரமாய் கிடைப்பாரோ
இல்வாழ்வை கெடுப்பாரே அன்றி
நல்வாழ்வை கொடுப்பாரோ

போதையால் பேதையனானவனை
பெற்றவளும் வேண்டாள்
தாரமாய் பெற்ற பெண்ணும் வேண்டாள்
அவனை ஏறெடுத்தும் பாராள்


https://m.youtube.com/watch?v=FZNjsf2QftU

No comments:

Post a Comment