பொற்தேராய்
மழைமேகக்காராய்
மாதங்களில் ஒன்றெனச்சீராய்
பொக்கிசமே பொங்கி வழிய வாராய்
எனப்போற்றிய திங்கள் ரமழானே
கரைந்தோடும் நீராய்
எம்மை விட்டு போறாய்
எம் ஈமான் இருந்தது பாழாய்
செதுக்கி செய்தாய் கூராய்
இனி அத்தனையும் போகும் சுக்கு நூறாய்
இறைவா அருள் புரிந்து காப்பாய்
முதல் பத்தில் முப்பொழுதும்
அடுத்த பத்தில் சில பொழுதும்
ஈற்றுப்பத்தில் ஏதோ ஒருபொழுதும்
பள்ளியில் தொழுதும் அழுதும்
கேட்ட பாவமீட்சி அத்தனையும்
காட்டாறில் அள்ளுண்டு போகுதே
வண்ண வண்ணமாய்
வர்ண வர்ணமாய்
வாகான துணிமணிகள்
வாங்கவே வழியெங்கும்
வரைமீறித்திரிகிறோம்
ஆடை ரகங்கள் அறுநூறு
அதில் அழகானது சிலநூறு
வாங்கிக்குவிப்போம் இருநூறு
அவற்றுள் அலங்காரம் அட
பெருங்கொடூரம் ஆனாலும்
அதில் வாங்குவோம் மறுநூறு
ஆனால் பக்கத்தில் பட்டினியாய்
கிடக்கிறாள் ஜஹான் நூறு
வழமையாய் ஆறுமுகம் வழியால்
வருவாரு போவாரு ஒருநாளேனும்
அழைத்தோமா வீட்டிற்கு வருமாறு
நிவாரணப்பொதி பள்ளியிலே
கொடுத்தால் மனுக்கொடுப்போம்
எமக்கும் தருமாறு ஏதேனும்
இதில் நிகழ்ந்தால் தாறுமாறு
நடக்கும் தகராறு
எங்கே போகுது எம் புகழ் பொங்கும்
நபித்தோழர் வரலாறு
இப்படிக்கொண்டாடுவதுதான்
திருநாளென்றால்
அப்படியொரு திருநாள் எமக்கு வேண்டாம்
கொடுப்பாருக்கு குறைவில்லை
எடுப்பாருக்கு நிறைவில்லை தடுப்பாருக்கு வாழ்வில்லை
கெடுப்பாருக்கு உய்வில்லை
கொடுத்து மகிழ்வோம்
கொண்டாடி மகிழ்வோம்
உடுத்தி மகிழ்வோம்
இல்லாதவருக்கு உதவி மகிழ்வோம்
No comments:
Post a Comment