Friday, 20 May 2016

விதைத்தது விளைந்தது

மாரிக்கென்ன நேர்ந்தது?
மாறிப்பெய்கிறதே மழை என
மாறாட்டத்தில் திரிகிறது
மாந்தர் கூட்டம்

உச்சி மண்டை
உட் சென்று
உள்ளிருக்கும்
நட்சிந்தை கொதிக்க

நாள்தோறும்
நரகத்து நெருப்பை
நானூறாய் பிரித்து
அதில் ஒரு நாராய் எடுத்து
நமக்களித்த நெருப்பை
பகலவன் கொடுத்தெரிக்க

கொஞ்சமாய் கனிவைக்காட்டி
கனமழை பொழியாதா?
என ஏங்கிய பொழுது
வளியில் ஒரு துளி வீழக்காணோம்

மாரி என்றால்
மழைவெள்ளம்
எனும் காலம்
மலை ஏறி
மாரி என்றாலே
மண்டைகாயும
மாந்தர்கள் மயங்கிச்சாயும்
காலமாகிற்றே

கோடை என்றால்
கொடுஞ்சூடு
எனும் காலம்
காணாமல் போய்
கோடை என்றால்
வானம் கொட்டித்தீர்க்கும்
காலமென்றாகிற்றே

காலங்களின் கோலங்கள்
காலமாகிவிட்டன
மனித ஜாலங்களே
காலங்களின் கோலமாகிவிட்டன

வளிமண்டலத்தில்
வாயொன்று வந்துவிட்டதால்
வாயாலே வந்து
விழுகிறது விஷவாயுக்கள்

இத்தனையும் வரக்காரணம்
பாதகப்பாவி மனிதன்தானாம்
வானவர் ஜிப்ரீல் வழிவந்த
வையகத்திருமறை செப்புகிறது.

செவியேற்கத்தான் ஆளில்லை
செவிடர்களாகித்திரிகிறோம்
இனி எப்படி
செவ்வையான தீர்வு பிறக்கும்

No comments:

Post a Comment