கெடு பிடி தொடர்ந்த படி
ஒரு நொடி மறு நொடியென
நொடி நொடியாய் வெடித்தபடி
அடி தடி ரணங்கள் நடந்ததடி
அந்த வடபுலத்து நிலத்தின்
மடியிலே
இடியது விழந்தது அன்றொரு
தினத்திலே
இருளது படிந்தது விடியலதின்
முடிவிலே
இருமணி நேரக் கெடுவிலே
இருநூறாயிரம் மக்கள் கூட்டம்
இருவேறு பதினாறு திசையிலே
இருகூறாய் திசையறியாது திரிந்தனரே
இதுகாறும் தொண்ணூறு எனும்
துயர் எந்நேரம் சொன்னாலும்
நெஞ்சின் உள்ளூர தகிக்கும்
தழல் இடியேறாய் வெடிக்கும் நொடியிலே
ஆண்டு தொண்ணூறு
மூண்ட யுத்தமதில்
ஈண்டு சொன்னது புலி
வடபுலத்தை தாண்டாமல்
போனால் மாண்டுபோவீர்
போகும் போது புலிகளின்
விதிகளை எடுத்தொழுகுவீர்
உடுத்த துணியோடு -கையில்
எடுத்த பொருளோடு
அடுத்த இருமணி நேரத்துள்
படுத்த மனை துறந்து
நெடுத்த பனை காணாது
கண்காணா தேசம் போனால்
உங்களுக்கு உண்டு சுவாசம்
வருடங்கள் ஆயிரம்
வாழ்ந்த வம்சமொன்று
வடக்கிலன்று வழக்கிழந்தது
வழக்கிழந்த வம்சமதை
மீள வாழவைக்கவே
வந்துதித்ததுவே ஹஸ்புல்லாவெனும்
வானத்துச்சூரியன்
வங்கம் கடந்து எங்குமே
குரல் கொடுத்து
அறிவும் ஆய்வும்
ஒருங்கே பிரவாகித்து
நீதிப்பிரளயம் ஒன்றை
நிகழ்த்திக்காட்டியது.
வடக்கு வாழ் சோனகருக்கும்
ஈழத்துச் சோனகருக்கும்
இன்னும் எல்லா ஈழத்தவருக்கும்
அறிவாயுதம் ஏந்தி
ஆய்வாயுதம் போர் அறிவித்து
நீதி வாகை சூடிய மன்னவரே
நீர் வாழுங்காலம் எல்லாம்
உமைப்பலர் காணவில்லை
நீர் போன பின்னே உமை
பலர் புகழாத நாளில்லை
உதயம் ஒன்று இருக்குமானால்
அஸ்தமனம் இல்லாது போகுமா?
வடபுல வானத்துசூரியனே!
எருக்கலம்பிட்டி நித்திலமே
நீர் இறையடி எய்தினீரே!
உமக்கு கோடி நன்மை
தேடி வரும் தாய் மண்ணே
உமக்கு ஈற்றில் மடிதரும்.
உயரிய சுவனம் உமக்கு
வரவேண்டும். உம் ஈடிலா
பணிகள் மீசானில்
மலையென கனக்க வேண்டும்.
இது பேராசிரியர் கலாநிதி
ஹஸ்புல்லா அவர்களுக்கு சமர்ப்பணம்
No comments:
Post a Comment