Friday, 31 August 2018

எலும்பில்லா நாக்கு எங்கிட்டும் புரளும்


உச்சி வெயில் கொழுத்துகிறது அதற்குள்ளும் ஈரத்தென்றல் மேனிதழுவி மெல்ல நழுவுகிறது பொற்கேணி  - வெள்ளிமலை வீதியில் பண்டாரவெளியில் விரிந்து வளர்ந்த வேம்படியில் நான்கைந்து கல்லிருக்கைகளில் தோராயமாக பத்திருபது நபர்கள்  எல்லோரும் நாற்பத்தைந்து வயதைக்கடக்காதவர்கள் பேரூந்திற்காக காத்திருந்தவர்கள் அவர்களை வழியனுப்பவந்தவர்கள் இன்னும் சிலர் வழியால் செல்பவர்களின் வாய்பார்க்க வந்தவர்கள் எல்லாமாக
கதையளந்து கைவீசி கைவாறு மழைபொழிகிறார்கள்.

ஓரமாக ஒரு மாதும் தன் மகனோடு மரியாதையாக இருக்கிறாள். (கதைக்கும் மாதுக்கும் சம்பந்தமில்லை)  அவர்கள் அரசியல் பேசுகிறார்கள் அது ஒரு பாராளுமன்றமாக காட்சி தருகிறது,  விளையாட்டு பேசுகிறார்கள் அங்கு வார்த்தைகளால்  உலகக்கிண்ணம் நடக்கிறது,  இப்படி வைத்தியம், வரலாறு, பொருளாதாரம், இதற்கிடையில் ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு தீர்ப்பளிக்கிறார்கள் அத்தீர்ப்புக்களில் சிறை , புதுமுறை தண்டனைகள் இன்னும் சிலருக்கு  மரணதண்டனை கூட தீர்ப்பளிக்கிறார்கள் அது நீதிமன்றமாகிறது. 
தொலைவில் புழுதி கிளம்பி புகைமண்டலமாய் தெரிகிறது ஆம் யாவரும் இருக்கைகளில் இருந்து எழுகிறார்கள் வேறுசிலர் பொதிகளை தூக்குகிறார்கள் ஏனெனில் பேரூந்து வருகிறது.

பேரூந்தும் சிவப்பு பாதையும் சிவப்பு புழுதி மண்டலமும் சிவப்பு.
பலவருடங்களால் வாய்களால் காபர்ட் பாதையாக புனர்நிர்மாணிக்கப்படும் செம்மண் பாதை அது . பேரூந்து வந்ததும் ஏறுகிறார்கள்  வெறும் ஆறு பேர்கள் மட்டுமே ,ஏனையவர்கள் எல்லாம் வாய்பார்க்கவும் வழியனுப்பவும் வந்தவர்கள்.
"ஒருத்தன் போறத்துக்கு என்னம்மா ஊரக்கூட்டிட்டு வாரிங்க " என நடத்துனர் வார்த்தைகளால் வாழ்த்துமழை தூவுகிறான். அப்பேரூந்தில் நானும் ஏறிக்கொள்கிறேன்.  நான் தரம் எட்டில் இருப்பேன் அப்போது  ஒரு நாள் கொப்பித்தாள்களை  ஒட்ட வேப்பம்பிசினையும் எஸ்லோன் கம்மையும்
கலந்து ஒட்டியபோது கொப்பி திறக்கவே முடியாதபடி ஒட்டிக்கொண்டது பெரும் பிரயெத்தனம் எடுத்து பிரித்தேன் பிய்ந்து வந்தது.  அதே வேப்பமர பிசின் காய்ந்து காண்ணாடி போன்று காட்சிதந்தது  பண்டாரவெளி வேபப்ப மரத்தில் அதை உடைத்து கையில் எடுத்து உருட்டிக்கொண்டேறியதால் அதனை பேரூந்தின் சாளரத்தால் எறிந்தேன். எறிந்ததும் பேரூந்தில் தூரத்தில் தெரிந்தான் பால்ய நண்பன் அவனோடு அளவளாவி சிறிது நேரத்தில் அவன் இறங்கிவிட்டான்.

பேரூந்தில் இடைக்கால இசைமழை இதையத்தை பிளக்கிறது.பேரூந்தும்  வில்ப்பத்து விலங்கியல் வனாந்தரத்தின் உயர் ரக வீதிகளில் அலைமோதுகிறது தள்ளாடுகிறது துள்ளாட்டம் போடுகிறது புழுதியும் தூசியும் முன்னும்பின்னும் புடைசூழ, பயணிகள் தம்மூக்குகளில் துணிகளை கட்டி தூசுகளை வடிகட்டி தூயகாற்றை சுவாசிக்கிறார்கள் . செம்மண் தூசி செம்மையாக சீராக இடையறாது  உடலெங்கும் படிகிறது அனைவரும் சிவப்பாகிறார்கள்  கருஞ்சிகைகள் அத்தனையும் செஞ்சிகைகளாகின்றன. அதற்குள் ஒருவன் என்னைக்கண்டு தவறிச்சிரித்தான் அவன் பற்கள் யாவும் சிவப்பாகின.
இப்படி இடுப்படிபடவும் காலிடிபடவும் வில்ப்பத்தின் நெடுந்தூரம் நின்ற நிலையில் வரும் போது வெகு வேகமாய் வந்த பேருந்து மேடு பள்ளம் வங்கு வளைவு  காடு கரம்பை பாராமல் போகிறது. ஓட்டுனரின் ஒரே நோக்கம் நேரத்துக்கு போய்ச்சேருவது மட்டுமே.  வெகு நேரம் கழித்து ஒருவர் இருக்கையை தந்தார் நானும் அமர்ந்துகொண்டேன்.

அவரும்  இன்னொருவரும் நிறையவே பேசிக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு இருக்கை தந்தவர் முகநூலில் வரும் தகவல்களை வாசித்து சில மெய்களையும் பல அண்டப்புளுகள்களையும் சொல்லிக்கொண்ருந்தார். அதையெல்லாம்  அவர் இருக்கை தந்தற்காக பொறுத்துக்கொண்டேன்.
ஆனால் இறுதியாக ஒன்று சொன்னார் சீனாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் தரைவழிப்பாலம் ஒன்றை கட்டிமுடித்திருப்பதாகவும் அப்பாலத்தின் தூரம் 7Km என்றும் அப்பாலத்தை கடந்த ஐந்தாம் திகதி இருநாடுகளம் இணைந்து திறந்ததாகவும் வரும் ஏழாம் திகதி மக்கள்  பாவனைக்கு விடப்போவதாகவும் அவர் சொன்னது என் சிரசில் ஒரு முரசு முழங்கியது. இதயத்தில் இடி இடித்தது ஒருகணம் திகைத்தேன் சீனாவுக்கும் மாலைதீவுக்கும் வான்வழி, கடல்வழிப்போக்குவரத்து மட்டுமே சாத்தியம் இது சாத்தியமே இல்லை என சொல்லி உலகவரைபடத்தில் காட்டினேன் உடனே  சொன்னர் அப்படி இல்லையாயின் சீனாவுக்கும் மாலைதீவுக்கும் உறவுப்பாலமாக இருக்குமென்று. உடனே ஊர்ப்பழமொழி நினைவுக்கு வந்தது "எலும்பில்லா நாக்கு எங்கிட்டும் புரளும் " என்று.  புத்தளமும் வந்தது நானும் செம்மந்தியாக இறங்கினேன் செம்மண்தூசுகளோடு.

No comments:

Post a Comment