வெண்முத்து நன்முத்து
பல்முத்து மெல்லச்சிரித்து
மேடையில் நின்று
மேசைபலகை பிடித்து
முத்துமுத்துச்சொற்கள்
கொத்துகொத்தாய்
அவிழ்த்து எம்
சித்தம் தெளிய
நாடு தழுவி நடக்கும்
யுத்தம் பற்றியும் நல்ல
தகவல்கள் என நித்தம்
எமக்கு சொல்லித்தந்த
புத்திஜீவி-எம்
அருஞ்சொத்தே
பெரும்முத்தே
ஆசான் அகாரே
நீரே சொல்மழை காரே
உம் வழி நேரே
உம் பின்னால் பெரும்பாரே
எம் சேரே எங்கள் அகாரே
நற்சுவை பொற்சுவை
பழச்சுவை பாற்சுவை
அறுசுவை முச்சுவை
அச்சுவை இச்சுவை
என உம் பேச்சினில்
எச்சுவை குறைந்தாலும்
என்றும் குறையாது
உம்நகைச்சுவை
பண்ணெடுத்து பாகெடுத்து
தேனெடுத்து தெவிட்டாமல்
பேச்சை தொடங்கி
பின்அடுத்து நெருப்பெடுத்து
வெறுப்பெடுத்து
பொறுப்பாய் பேச
உம்மை அன்றி
வேறெவரால் முடியும்
எம்மொழி நம்மொழி
செம்மொழி தமிழ்மொழி
கதைத்தாலும் பன்மொழி
பிறமொழி அறபு ஆங்கிலம்
சிங்களம் என எம்மொழி
நீர்கதைத்தாலும் உம்
கண்விழி கம்பீரமாய்த்தான்
காட்சி தரும்
காலைப்பொழுது
மூடுபனி மூடி
கவிந்து கிடக்கையிலே
கதிரவன் வந்து
பனிதனை கிழிக்காமல்
கிடக்கையிலே
நளீமியா நம்வனத்தில்
நந்தவனத்தில் நறுமணத்தில்
கருநிற குதிரையில்
கரமதில் வில்லேந்தி
முகமதில் மூடுதிரை அணிந்து
மூடுபனி கிழித்து
தங்கி நில்லாமல்
பொங்கியெழும் புயலாக வருவீரே
உம்சொல் நல் பன்னீரே
உம்பேச்சில் கொதிக்கும் செந்நீரே
சிலபொழுது வழியும் கண்ணீரே
சிலபொழுது நுங்குத்தண்ணீரே
ஒட்டுமொத்த உடல் பாரத்தையும்
ஒற்றைக்காலில் முட்டுக்கொடுத்து
ஒருஓரமாய் ஒருக்களித்து நின்று
ஒருகரம் காற்சட்டைப்பையினுள்
நுழைய மறுகரமெம்முன் வளைய
'என்னபாடம்' என்று நீர்
கேட்கும் கர்ச்சனையில்
நான் என்னை மறப்பேன்
ஒருநொடி உயிர் துறப்பேன்
கல்லாய் விறைப்பேன்-மறு
கணம் மீண்டும் நான் பிறப்பேன்
பற்கடித்து முறைத்துப்பார்க்கும்
உம்பார்வையில் நான்
விறைத்துப்போனாலும்- உம்மீது
உள்ள பெருமதிப்பும் பேரன்பும்
எம்முளத்திலென்றும் குறையாது
நீர்நகைக்கும் புன்னகைக்கும்
பொன்னகைக்கும் ஈடாக
முகைக்கும் பூக்கள்தானே
நகைக்கும்- நீர்நகைக்கும்
நகையில் பனிப்புகைக்கும்
கூதல் அடிக்கும் -உம்
நடைக்கும் அழகு சிகைக்கும்
வீரச்சிங்கங்கூட முறைக்கும்
நிரந்தரமாய் பகைக்கும்
பகைப்பாருக்கு உம் வாக்கு
போர்துவக்கு
நகைப்பாருக்கு உம் வாக்கு
நல்லபாக்கு
உம் உடல் வாக்கு
உம் முக மூக்கு
வீரப்பேச்சு நாக்கு
எல்லாமே வைரத்தேக்கு
துணிந்வனுக்கு தூக்குமேடை
பஞ்சுமெத்தை
அகார் சேருக்கு அகப்பட்டது
எல்லாம் பேச்சுவித்தை
அவர் அறிவுச்சுடர் அதில்
நானொரு விட்டில்
அவர் அறிவுக்காடு அதில்
நானொரு நத்தை
அவர் அறிவுச்சாகரம் அதில்

அவர் அறிவாகாயம் அதில்
நானொரு பட்சி
அவர் அறிவுச்சுனை அதில்
நானொரு அறுகம்புல்
ஆக மொத்தம் ஆசான்
அகார் அறிவண்டம்
நானங்கொரு அற்ப பிண்டம்
நெடுநாள் நலமுடன்
நீர் வாழ்க!
நீடூழி முழுதும் நீங்கா
புகழ் ஓங்குக!
நீறெனப் படிந்த மறதியை
நீரென தெளிந்த நினைவால்
நீக்கி நீடூழி வாழ்க!
No comments:
Post a Comment