Monday, 12 November 2018

உலக முடிவுக்கு விதி வகுத்த வீதி


கார்காலம் வானுக்கும் பூமிக்கும் போர் மூளும் காலம், பசுங்கம்பளம் போற்றிய பூலோகம் பூக்களின் குதூகலம், இந்த மழைக்காலம். மயில்கள் தம் இனம் அனைய பரவசம் எங்கும் பிரவாகம் எடுக்கும். நதிகளிலும் வீதிகளிலும் நீர் வலம் வரும். பெரும் விருட்சங்களிடையே குளிர் தென்றல் சில பொழுதுகளில் புயலாக மாறும். மரத்தின் பட்டையெங்கும் பாசி படர வளர்ங்திருக்கும் ஆலமரம் அதன்
அகன்ற கிளை கரங்கள் , நீளமாக நாளும் விழுதுகள் யாவுமே நீர் கசியும்.
இவை அத்தனைக்கும் நீருக்கும் புயலுக்கும் இயற்கை சீற்றத்துக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத நிலையில் விண் மோதும் கோபுரங்கள் போன்ற மாளிகையில் இருந்து கண்ணாடியூடாக கார்கால மழையையும் நீர் போர்கோலம் பூணும் நிலையையும் கண்டு மகிழ்ந்து இரசிப்பவனுக்கு எல்லாம் அழகு மயம். வாழ்வில் ஒரு வசந்தம். காதல் விளையாட்டிற்கு ஒரு கலம்பகம். ஆனால் அப்படியே மெல்ல மாளிகையில் இருந்து மாடிப்படி வழியாக கீழிறங்கி காயாது ஓயாது பெய்யும் பெரும்மழையில் ஊரை வலம் வரும் போது தூரத்தே சிறிய சிறிய ஓலைக்குடிசைகள்.


 மழையின் திவலைகளில் மெல்லக்கரையும் களிமண். நாயாக நனைந்து நடுங்கி நசல் ஏறிய மேனியோடு கூனிக்குறுகி முதுமையின் கிழத்தோற்றம் குடியேற ஒரு மனிதனின் கவலைகளில் கரையும் குடிசை. ஒரு ஓங்கி வளர்ந்த மாமரத்தின் அடியில் அந்தக்குடிசை. ஓரமாய் மழைக்கு ஒதுங்கிய பசு. அதன் மருங்கில் ஒருவர்.

அந்தக் குடிசையின ஒற்றைக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் நெற்றியில் நான்கைந்து கோடுகள், முகத்தில் பல சுருக்கங்கள், கன்னத்தில் குழி, தலையும் தாடியும் வெண்சங்கென நரைத்த முடி, வயதில் மூத்த கிழவர் ; அந்த மழைக்குள்ளும் பால் கறந்து தன் துணைவியின் பசியை போக்க குடிசையினுள் நுழைந்ததும் கூரையில் இருந்து வடியும் நீர் சொட்டு அவரின் நெற்றியில் சொட்டியது.

 வித்தியாசம் ஒன்றுமே இல்லை இவ்வளவு நேரமும் வான் மழையில் நனைந்தார் இனி கூரைக்குள் கூரை மழையில் நனைவார். உண்ண உணவின்றி பாலையேனும் காய்ச்சி குடித்திடலாம் வயிற்றெரிவு போக்கிடலாம் எனும் வேணவாவும் வீணவாவாக மாறும் போலதான் இருக்கிறது. யாதெனில் தீமூட்ட அடுப்பங்கரையாவது ஈரமின்றி நீரின்றி இருக்க வேண்டுமல்லவா?

ஒழுகிக்கரையும் ஒற்றைக்கதவைக் கொண்ட அந்தக்குடிசையில் ஒதுங்கிக் கிடந்த அந்தக் கிழவி முழங்காலை முட்டுக்கொடுத்து ; மெல்ல எழுந்து களிகொண்டு மெழுகிய மூன்றுகல் அடுப்பை     மூட்டுகிறாள் அதற்குள்ளும் முனகிக்கொண்டிருக்கிறது முடிவிலாத மழை நீரின் பிசுபிசுப்பு. அரைப்பங்கு எரிந்தும் எரியாது கரி பிடித்த கம்பு இரண்டையும் நான்கைந்து சுள்ளிகளையும் வைத்து மண்ணெய்யும் ஊற்றி ஒரு வகையில் தீமூட்டிவிட்டாள் கிழவி. அந்த மழைசூழ் காரிருள் குடிசையில் ஒளி ஏற்றிவிட்டு தன் கணவன் கையில் இருந்த பால் கிண்ணத்தை வாங்கி மற்றொரு பானைக்கு மாற்றி காய்ச்சுகிறாள்.

அந்த கிழவியின் பெயர் ஹஸீனா. அந்த கிழவரின் பெயர் அப்துல் கபூர் அவரை ஊரார் அத்துகபூர் நாநா என்றே அழைப்பர். மந்தை வளர்ப்பு அவரின் பரம்பரை தொழில். ஹஸீனா கிழவி பால்பானையை அகப்பையால் கடைகிறாள் அப்போது அத்துகபூர் நாநா பேச்சுக் கொடுக்கிறார். “ ஏன் ஹஸீனா! நமக்கு தீராத துன்பம் ஓயாதா? இந்த தலவிதி மாறாதா? இதெல்லாம் மண்டையோட போறதுதானா? ஒடம்புதான் தேயுது கஷ்டம் மட்டும் தானா கூடுது. நாளைக்கோ இன்னைக்கோ போகப்போறொம். அழ்ழாஹ்தான் வழிகாட்டணும்” என்று அத்துகபூர் நாநா சொன்னதும் பேச்சில் குமரியான வயதில் மூத்த ஹஸீனா கிழவியின் பேச்சுக்கள் உத்வேகமும் உற்சாகமும் அளிப்பவை. கிழவியின் குமரிப்பேச்சுக்கள்தான் இறைவனுக்கடுத்து அத்துக்கபூர் நாநாவை இன்னும் உயிரோடு ஊசாட வைத்திருக்கின்றன.

 இப்படியான ஹஸீனா கிழவி சொல்ல ஆரம்பித்தாள். “ ஏங்க நமக்குத்தான் ஒரு சிங்கக்குட்டி இருக்கிறான் அவன்தான் படிக்கிறான் அவன் டொக்டர் உத்தியோகம் எடுப்பான். அவன் படிப்ப முடிச்சா இனி யோகந்தான். அவன் நம்மள பாத்துக்குவான்” பால் பானையை கடைந்தவாறே கதையை
 தொடர்ந்தாள் ஹஸீனா கிழவி.

ஹஸீனா கிழவிக்கும் அத்தக்கபூர் நாநாவுக்கும் கண்ணே பொன்னேயென ஒன்றே ஒன்று அதுவும் ஒரு ஆண் சிங்கம் அதுவும் இருபது வருட அருந்தவத்திற்கு பிறகு பெரும் பேறாய் கிடைத்தவன். அத்துகபூர் நாநாவோ தனது முப்பதாவது வயதில் ஹஸீனா கிழவியை அதாவது அன்றைய ஹஸீனா குமரியை திருமணம் முடித்தார். இன்று அம்மகனின் வயது இருபது இருபத்து முன்று வயது இருக்கும் அவனின் பெயர் ஷராபத். என்றாலும் அவன் கஷ்டத்திலும் துயரத்திலும் வளர்ந்தவன்  ஆனால் நல்ல வலுக்கெட்டிக்காரன் சுட்டித்தனம் கூடியவன் அவன் ஆசைப்பட்ட எதுவும் இலகுவில் அவனுக்கு கிடைக்காது. ஏனெனில் அவனது தாயும் தந்தையும் அவ்வளவு வறியவர்கள்.

ஆனாலும் அவன் தாயிடம் இருந்து  கிடைப்பது அவன் ஆசைப்பட்ட பனங்காய் பணியாரம். அவன் தந்தையிடம் இருந்து கிடைப்பது அவன் ஆசைப்பட்ட பசுப்பால்தான் இதை கடந்து எதுவும் அவனுக்கு கிடைக்காது அப்படி அதற்குமேல் எதற்கும் அவன் ஆசைப்பட்டது கிடையாது. என்றாலும் அவன் கற்ற கல்விக்கும் அவனது திறமைக்கும் அவனது பெற்றோரின் கனநாள் கனவுக்கும் ஈடாக அவன் வைத்திய துறையில் தெரிவாகி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கிறான். இப்படி ஹஸீனா கிழவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கனமழை குறைந்து வானம் தன் சிறுதுளிகளை சிந்திக்கொண்டிருக்கிறது. கூரையில் இருந்து ஒற்றைத் துளி திறந்திருந்த ஒற்றைக் கதவின் முன்னால் கீழே விழுந்து பல துளிகளாய் துமிக்கிறது. அப்போது “ட்ரிங்… ட்ரிங்…” எனும் ஓசை கேட்கிறது.

அந்தக் கிழவர் குடிசையைவிட்டு வெளியே பார்க்கிறார் “அத்துக்கபூர் நாநா ஒங்கட மகன் படிக்கிற கெம்பஸ்ல இருந்து கடிதம”; என்றான் தபால்காரன் இதை செவியேற்றதும் அத்துகபூர் நாநா புளகாங்கிதம் அடைந்தார். ஏனெனில் அத்துக்கபூர் நாநா வீட்டிற்கு வரும் இரண்டாவது தபால்தான் இது. இதற்குமுன் முதலாவது வந்த தபால் அத்துக்கபூர் நாநாவின் மகன் ஷராபத் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளான் என்ற தபாலாகும். அதற்கு பிறகு வரும் இரண்டாவது தபால் இதுதான். அதனால்தான் அத்துக்கபூர் நாநா ஆனந்தப்பெரும்மழையில் நனைந்த திளைத்தார்.

தபாலை பெற்று வீட்டுக்குள் நுழைகிறார் ஹஸீனா முன் பிரிப்பதற்காக பேருவகை பொங்க மெல்ல பிரிக்கிறார் கடிதத்தை பின்னர் மனதால் வாசிக்கிறார். அந்த கடிதத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது அத்துக்கபூர் நாநாவுக்கு காக்கை வலிப்பு வந்துவிட்டது. இதை பார்த்த கிழவி அகப்பையை கீழே போட்டுவிட்டு தன் கணவாரான அத்துக்கபூர் நாநாவை தூக்குவதற்காக பதறியடித்து ஓடுகிறாள் கிழவி தன் தள்ளாத முதுமைப்பருவத்தையும் மறந்து. ஓடிவந்து தலையை மடியில் தூக்கி வைத்து “என்னங்க ஒங்களுக்கு ஓண்ணுமில்லை” என கூறியவாறே அழுகிறாள்.

அடுப்பிலிருந்து பால்பானை பொங்கி நுரை வழிந்து மெல்ல எரியும் தீக்கீற்றையும் அணைத்துவிடுகிறது. கிழவியின் மடியிலிருந்தவாறே நுரை கக்குகிறார். அந்நுரை கொஞ்சமேனும் ஊசாடிக்கொண்டிருந்த அத்துக்கபூர் நாநாவின் உயிரை அணைத்துவிடுகிறது. கிழவியின் அழுகையோசை கேட்டு அயலவர்கள் விரைந்து வருகிறார்கள். இறையடியெய்தினார் அத்துக்குபூர் நாநா. இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு ஊர்மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டார். வாரங்கள் மூன்று கடந்தன கடிதமும் மழை நீரில் ஊறி கரைந்துவிட்டது. மகன் தந்தையின் ஈமச்சடங்கிற்கும் வரவில்லை இதுவரை எந்த தகவலும் அனுப்பவும் இல்லை கணவன் இறந்த கவலை ஒருபுறம் தன்னை மகன் மறந்த துயரம் இன்னொரு புறம்.

 நான்கு மாதமும் பத்து நாளும் இத்தா எனும் கடமையை முடித்துவிட்டு தனக்கிருக்கின்ற ஒரே உறவான தன் மகன் ஷராபத்தை நேராக போய் பார்க்க வேண்டும் அது எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை என தனக்குத்தானே சபதம் செய்துகொண்டாள். ஊரில் விசாரித்து பல்கலைக்கழக விலாசத்தையும் தன் வீட்டில் அத்துக்கபூர் நாநா சேர்த்து வைத்த ஐயாயிம் ரூபாவை நெஞ்சு சட்டைக்குள் செருகிக்கொண்டு பேரூந்தில் ஏறினாள் கிழவி. பேரூந்தில் சிறு சிறு பயணங்கள் போன ஹஸீனா கிழவி முதல்முறையாக நீண்டதொரு பயணத்தை தொடங்கியிருக்கிறாள்.

பல்கலைக்கழக வாயிலில் கொஞ்சமாக கூனிக்கொண்டு ஒரு கையால் சேலை முந்தானையால் முக்காடிட்டு அதனை மீள சரிசெய்து கொண்டு ஒரு கையை நெற்றியில் வைத்து உற்று நோக்குகிறாள். வாயில் காவலன்  ஒருவன் வந்து “என்னம்மா பாக்குறீங்க. என்ன வேணும்” என்று கேட்கிறான் அதற்கு கிழவி “இல்லப்பா இங்கதான் என்னட மகன் டொக்டருக்கு படிக்கிறான்  அவனை பாத்தட்டு போகத்தான் வந்தேன்” என கூறிவிட்டு மீண்டும் “ஓன்ட பேர் என்னப்பா?” என்றதும் வாயில் காவலாளி “ அம்மா என் பெயர் கருப்புசாமி” என பதிலளித்துவிட்டு “ அம்மா ஒங்கட மகன்ட பெயர் என்னன்டு சொல்லுங்க இங்க நாலாயிரம் பேர் படிக்கிறாங்க அதுல ஒங்கட மகன எனக்கு எப்புடி தெரியும்?” எனக்கேட்டான் காவலாளி. உடனே கிழவி “ மகன்ட பேரா? அது ஷராபத்” என்றாள். அதற்கு காவலாளி “ அப்புடி யாரையும் எனக்கு தெரியாதே” என்றதும் ஹஸீனா கிழவிக்கு ஒரு கணம் இதையமே நின்றது போலிருந்தது பின்னர் அந்த தள்ளாத வயதிலும் தன்னை சுதாகரித்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

“வட்ட மொகம்; ஏறு நெத்தி; நட்டு முடி; கறுப்பா வாக்கா இருப்பான் ஏன் மகன்” என்றாள், காவலாளியோ “நானென்டா காணயில்ல வேணுமென்டா உள்ள போய் பாருங்க” என்றான் ஹஸீனா கிழவியும் வேகமாக “ அட போப்பா நீ ஒரு ஒலகம்” என்று சொல்லிவிட்டு கிறுகிறுவென பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்றாள். வேகும் வெயிலில் பனை ஓலைப்பெட்டியும் கையில் எடுத்தக்கொண்டு நீலநிற நெகுழி காலணியையும் காலில் அணிந்து கொண்டு மெல்ல மெல்ல நடந்து செல்கிறாள். தூரத்தே இளைஞர் கூட்டம், ஹஸீனா கிழவிக்கு ஒருவித பூரிப்பு தன் மகன் ஷராபத்தும் அக்கூட்டத்தில்தான்  இருப்பான் என்று.

இந்த ஹஸீனா கிழவியை கண்டு ஒரு இளைஞன் வேகமாக விரைகிறான் அதே நட்டு முடி; வட்ட முகம் ;கறுப்பு நிறம் ;ஏறு நெற்றி; ஆம் ஷராபத்தே தான். ஆம் ஹஸீனா கிழவியின் மகன்தான் வருகின்றான் என்று கிழவியும் உள நிம்தியடைகிறாள். அருகே வந்த பிறகு கழவியின் சுருக்கம் விழுந்த முகத்தில மேலும் பல நூறு சுருக்கங்கள் தெரிகின்றன ஏனெனில் அது ஷராபத் இல்லை. ஆனாலும் வந்த இளைஞன் “நீங்கதானே ஷராபத்ட அம்மா” என்றான். இதனைக் கேட்டதும் கிழவிக்கு அவன் தன் மகன் ஷராபத் இல்லை என்றாலும் தன் மகன் இங்குதான் இருக்கிறான் என்று சாந்தப்படுத்திக்கொண்டாள். அந்த இளைஞன் ஷராபத்தின் வயதான தாய் ஹஸீனா  கிழவியை அழைத்துக் கொண்டு உணவகத்திற்கு சென்று பலவகை பானங்களும் பழவகை ஆகாரங்களும் கொடுத்தான்.

சாப்பிட்டுக் கொண்டே கிழவி “நீ யாருப்பா” என்றதும் அந்த இளைஞன் “என்னட பெயர் நகுலன் நான் ஷராபத்ட கூட்டாளி” என்றான். அதற்கு கிழவி “அப்ப என்னட மகன் இங்கதான் படிக்கிறான்” என்றதும் நகுலனுக்கு நெஞ்சில் ஒரு கணம்; சம்மட்டியால் அறைந்தது போல் பிரமை பிடித்தவன் போல திருதிருவென முழிந்தான். சில நொடிகள் கழிந்து நகுலன் சொன்னான் “ஷராபத்தும் நாங்களும் நாலு மாசத்துக்கு முன்னாலே” என்று கதையை தொடர்ந்தான். வைத்திய துறை மாணவ மாணவிகள் எல்லோரும் ஒன்றிணைந்து பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டிற்கான சுற்றுலா சென்றனர்.

ஐந்து நாட்களை கொண்ட அச்சுற்றுலாவின் மூன்றாவத நாள் மலையகத்தில் உயரமான மலைகளில் வளைந்தோடும் வீதிகளில் விரைந்து சென்று “உலக முடிவு” எனும் மலையுச்சியில் பனிக்காற்று வீச எல்லோரும் மலையழகையும் அதல பாதாளத்தையும் பார்த்து மெய்மறந்து போய் இருக்கிற வேளையிலே ஷராபத்தின் தோழன் சுரேஸ் சறுக்கி விழுந்து அகால மரணமடைந்தான். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டான் ஷராபத். இதனைத்தான் கடிதத்தில் அனுப்பியருந்தார்கள். இதனை நகுலன் சொல்லி முடிப்பதற்குள் உணவகத்திலே மூர்ச்சையாகி விழுந்தாள் கிழவி.

உணவகத்தில் உள்ளவர்களும் ஓடிவந்து பார்த்துக்கொண்டிருக்க நகுலன் நாடித்துடிப்பை பார்த்தான். ஆபத்தொன்றுமில்லை நீர் தெளித்து கிழவியை பழைய நிலமைக்கு கொண்டு வந்தனர். கண் விழித்து பார்த்த கிழவி அழுதாள் “ எனக்கு புருசனும் இல்லை இப்ப புள்ளையும் இல்லையே…!” என்று சொல்லியழுதாள். நகுலனைப் பார்த்து “தம்பி என்ன கூட்டிக்கிட்டு போ நான் ஷராபத்தை பாக்கணும்” என விடாப்பிடியாக இருந்தாள். ஷராபத்தை காண்பிக்க நகுலன் ஹஸீனா கிழவியை அழைத்துச் செல்கிறான்.
 உலக முடிவு

வைத்தியசாலைக்கு சென்று முன் வைத்தியர் இருக்கும் அறையில் பிரதம வைத்தியர் அமரும் இருக்கையில் கழுத்தில் நோயறிகருவியும் (தெதஸ்கோப்) வெள்ளை கோர்ட்டும் கையில் பேனாவுடனும் காட்சி தந்தான் ஷராபத்;. இது நகுலனுக்கு திகைப்பையும் வியப்பையும் அள்ளிச் சொரிந்தது. இதை கண்ட ஹஸீனா கிழவி உவகை பொங்க தன் மகன் ஷராபத்தை ஓடிச்சென்று கட்டியணைத்தாள்;. சில நிமிடங்களில் இரு பெண் தாதியர் வந்து “ அம்மா அம்மா இவர் மனநிலை சரியில்லாதவர்” என்றதும் கிழவி புலனைந்தும் இழந்து “ஷராபத் …. ஷராபத்…” என உதடுகளில் உச்சாடனம்  செய்து கொண்டே மூச்சை விடுகிறாள் ஹஸீனா கிழவி. உலக முடிவுக்கு விதி வகுத்த வீதி வழியே சற்றும் விலகாது பயணிக்கிறது ஹஸீனா கிழவியின் கனவு. 

 



 



No comments:

Post a Comment