வட்டப் பனியும் சொட்டப் பனிக்கும்
புல் நுணியும் மெல்லப் பணியும்
உன் வல்லமை யில் ஆண்டவா!!!!!
கவி சுரக்க உனை வேண்டுகிறேன்
புவி முழுக்க உனை புகழுகிறேன்.
அவையோரே! இளையோரே!
பிழையேதும் என்மீது கூறாத
கலையோரோ! அறிவோரே!
அரவணைப்போரே! அனைவருக்கும்
சுவனத்து முகமன் அஸ்ஸலாமு அலைக்கும்
தித்திக்கும் கொய்யாவும்
கொத்தித்தின்னும் மைனாவும்
தெவிட்டாப்பப்பாசியில்
பட்டொழுகும் தேனை
கொத்திப்பார்க்கும் மரங்கொத்தியும்
தேனூறு வாழையை தெவிட்டலற புசிக்கும்
இராத்திரி வௌவாலும் அணிலோட
அறுந்து விழும் மாம்பழமும் கொண்ட
பழச்சேனை எம் பூலாச்சேனை
சிறார் நாம் பூலாப்பழம் புசிக்க
நாலாபுறமும் பலநாளாய் திரிந்து
விலாப்புறம் தெரிய உலாப்போனது
பூலாப்பழச்சேனை பூலாச்சேனை
எமைவாழ வைத்த நிலாச்சோலை
காதணி அறுத்து பாதணி தொலைத்து
மேலணி கிழிந்து காலணி இழந்து - பல
நூறணியென பிரிந்து கற்பிட்டி கடலாலும்
மறிச்சுக்கட்டி திடலாலும் கடுநடையாக
கால்நடையாக வந்த எம்முன்னோரை
வாழவைத்த பூமி பூலாச்சேனை
நற்பதியாம் மன்னாரை நாமிழந்து
நிர்க்கதியாய் நாதியிழந்து
தெருவெங்கும் நாமலைந்து
எம் தலைவிதியே அகதியானபோது
பெருமனங்கொண்டு
பொற்பதியாம் பூலாச்சேனை
பூக்களால் ஆன சேனை
அழைத்தது எமை அன்போடு
பொல்லாத புலிகள்
வில்லாதி வில்லர்கள் -எமை
கொல்லாது இழிந்தவர்களாய்
விரட்டிவிட்டு எம் வீடுகளின்
ஓடுகளை திருடிய வேளை
வாருங்கள் எனவரழைத்தது புத்தளம்
எம்மை காடுகளில் துரத்தி
எம்மாடுகளை அபகரிக்கும் வேளை
காடுகளை அழித்து வீடுகளை சமைக்க
காணிகளை தந்தது புத்தளம்
நான் பிறந்தது புத்தளம் -என்
பூர்வீகம் புதைந்திருப்பது மன்னார்
அதனால் புத்தளமென் ஒருகண்
மன்னாரென் மறுகண்
கொள்கை குழப்பமதால் ஆண்டு
மூன்று வரை அறபுக்கலாசாலையொன்றில்
பயின்றேன் அதற்கே முகவரி கிடையாது
பிறகெப்படி எனக்கு முகவரி இருக்கும்
ஏன் முகவரியின் முதல்வரிகூட கிடையாது.
அரசபாடசாலையில் எனைச்சேர்க்க
என் தந்தை அலைந்த போதெல்லாம்
அதிபர்களெல்லாம் புறக்கணித்தனர்.
அறபு அறபென அறவே ஏதும்
தெரியாதவனை எப்படி ச்சேர்க்க
ஆவணங்களேதுமின்றி எதைக்கிழிக்க
என்றே புறக்கணித்தனர்.
நாதியற்றோருக்கு அடைக்கலம் பூலாச்சேனை
நாதியற்ற எனக்கும் அடைக்கலம் இப்பூலாச்சேனை
கலைக்கூடம் -ஆண்டைந்து வரை கற்றேன்
புள்ளிக்கணிப்பீடுகள் யாவும் பெற்றேன்.
ஆசான் நவாஸ் அவர்கட்கு
நன்றியதை நான் நவின்றேன்.
அதன்பின் ஆறுமுதல் பதினொன்றுவரை
கொய்யாவாடியில் பயின்று நளீமிய்யாவும்
சென்றேன். நானொரு கவிஞனென
இங்கே நின்றேன்.
பூலாச்சேனை கலாசாலையே!!!
நீமட்டும் எனை புறக்கணித்திருந்தால்
அகவை பதினாறில் பைஅத் செய்திருப்பேன்
அகவை பதினெட்டில் மணமுடித்திருப்பேன்
இன்றைய தேதியில் இஸ்லாமெனும் பெயரில்
இரண்டாம் மணத்திற்காய் மணப்பெண்
இன்னொனன்று பார்த்திருப்பேன்.
உனக்கு மீண்டுமென் நன்றிகள்.
* என்னை அழைத்த அதிபர் இம்ரான் அவர்களுக்கும்
ஏற்பாட்டு குழுவுக்கும் என் நன்றிகள்.இது 2018.05.01 பூலாச்சேனை முஸ்லிம் ம.மு.வி இருபத்தைந்தாவுது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாடப்பட்ட வெள்ளிவிழா நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment