Saturday, 24 February 2018

மரம் வளர்ப்போம்

கோர வெயிலோ கொடு
            நெருப்பாய் எரிய
வான மழையோ மாரியிலும்
            காணாமல் போக
தூர நிலத் தரையோ
             தரிசாய்     போக
காணும் போது கண்கள்கூட
            காய்ந்திடுமே கண்ணீரின்றி

போகும் வழியில் நாய்கள்
                 சாகும் தினமே
நோயும் விழியில் தெரியும்
                 போகுந்தெருவில் மனிதரிலே
வேகும் வெயிலில் மனம்
                   நோக நடப்போம் நாமே
சோகம் யாதெனில் சொல்ல
                   மரமில்லை எங்குமே! 

வாழும் மரங்களை நாம்
                 வெட்டினோமே அன்றி
வாழ நோயின்றி மரம்
                  நட்டினோமா நாம்?
வெட்டி வெட்டி விறகெடுத்தோம்
                 சாயம்பூச வேரறுத்தோம்
கூரை கட்ட காடழித்தோம்
                 எம்மையே கொன்றொழித்தோம்

சூழல் பாதுகாப்பில் நாம்
                ஊழல் செய்தோம்
ஆலமரம் நின்ற ஊரை
                அலங்கோலம் என்றோம்
மரங்களே இல்லா மாநரகை
                மாநகர் என்றோம்
தரங்கள் கொண்ட வாழ்வைக்கண்டு
                மரங்களை இழந்தோம்

மாசுகளையும் தூசுகளையும் களைய
                மரங்களை அழித்து
காசுகளை வீசுகிறோம் தூசு
               நீங்காதோவென ஏசுகிறோம்
பாசிலை எரித்து பசுஞ்சோலை
                அழித்து சுவர்களில்
பூசுகிறோம் பச்சை வர்ணம்
                கூசுகிறதே காணும்போது

நம்மை அழிக்க நாமே
                துவேசம் பேசுகிறோம்
வெம்மை கூடும்படி மரங்களை
                நாசம் செய்கிறோம்
செம்மை உதட்டுக்கும் கருமை
                கூந்தலுக்கும் பூசுகிறோம்
எம்மை காக்கக எம்சூழலை
                 கொஞ்சம் செம்மைசெய்தோமா??

மோசப் புற்று நோய்
                 எம்மை நேசங்கொள்ளும்
நாசம் நாம் சூழலை
                 செய்து வந்தால்
சுவாசப் புற்று நோய்
                  எம்மீது பாசங்கொள்ளும்
மரங்களையும் வனங்களையும் துவம்சம்
                  செய்து வந்தால்

வளிக் கலவையை எப்பொழுதும்
                 வளிச்சலவை செய்வது
வளர் மரங்களன்றி உலக
                   ஜனங்கள் அல்லவே!
வேரைக் கொண்டு  நீரை
                    வடி கட்டுவது
பெருந் தருக்களன்றி பெருந்
                   தெருக்கள் அல்லவே!

வேருக்கு தீ வைத்தோம்
                    நீருக்கு விலைகொடுத்தோம்
காருக்கு பென்ஸ் அவ்டியென
                    பேர் வைத்தோம்
காற்றுக்கு காபனீர் ஒக்சைட்டால்
                    களங்கம் விளைவித்தோம்
உயிருக்கு உத்தர வாதமின்றி
                    உலை வைத்தோம்

பெருஞ் சாலைகள் அமைக்க
                   சோலைகள் அழித்தோம்
தொழிற் சாலைகள் அமைக்க
                   பூஞ்சாலைகள் எரித்தோம்
பகல் காலையென சமைக்க
                    பானையில் சோறிருக்க
இருள் மாலையில் ஒளிநிரப்ப
                    மரங்களைத்தானே எரித்தோம்!

அபிவிருத்தி அபிவிருத்தியென அதி
                   திருப்தி அடைந்தோம்
மரங்களை அழித்து மாசடைந்ததும்
                   அதிருப்தி அடைந்தோம்
கண்ட      கண்ட       கதிர்கள்
                    வந்து விழுந்ததும்
கலங்கள் புது விருத்தியடைய
                    புற்றுநோயில் விழுந்தோம்

வட்டவட்ட மேசைகளில் கூடி
                    கதைத்து பயனில்லை
வெட்டவெட்ட வளரும் மரங்களை
                     ஒட்ட வெட்டி
மட்டம் தட்டி அபிவிருத்தியென
                       பட்டம் கட்டினோமே!

நட்டநட்டத்ததான் நாடு செழிக்குமென்று
                      நாம் அறிந்தோமா??
அட மட்டரக மனிதனுக்கே
                    தெரியும் இது
ஆனால் பட்டம் பெற்ற
                      முட்டாள்களுக் தெரிவதில்லை
கட்டங் கட்டமாய் நாம்
                      மரம் வளர்ப்போம்
திட்ட மிட்டு நாட்டை
                       நாம் காப்போம்

ஆறு இல்லா ஊருக்கு
                        அழகு இருக்காது
மரங்கள் இல்லா ஊருக்கு
                        நீர் இருக்காது
நீர் இல்லா ஊருக்கு
                        மக்கள் இருக்காது
மக்களில்லா பூமிக்கு ஊரென்று
                       பேரொன்று இருக்காது

மழை வேண்டித் தொழுகிறீர்
                       மரமின்றி மழையேது?
கரம்நீட்டி வரம் கேட்கிறீர்
                       மரத்தைவிட வரமேது?
தரமானசுகத்திற்கு தேன் தேடுகிறீர்
                      மரத்திலில்லா   தேனெங்குமிராது!
மரம்வளர்ப்போம் நிலம் காப்போம்
                      நீர் சேர்ப்போம்.
            

No comments:

Post a Comment