Sunday, 26 May 2019

மன்னாரமுது இலக்கியச் சுனை 02


ராபிதா கலமியா வெளியீடு 2018 - 2019

ஆசியுரை ஆசான் அஷ்ஷெய்ஹ்  அஷ்கர் அரூஸ் நளீமி MA



              
கவித்துவ ஆற்றல்களை தன்னகத்தே ஆழ, அகலத்தோடு பெற்றிருக்கின்ற  மாணவன் அஹ்னப் அவர்களின் இவ்வெழுத்தாக்க தொகுப்பான “மன்னாரமுது இலக்கியச் சுனை - 02”  இற்கு ஆசியுரை வழங்குவதில் பேருவகை அடைகிறேன்.

 ஜாஹிலிய்யாக் கால மக்கள் பெற்றிருந்த பெருஞ்செல்வம் கவிதை. அவர்கள் அதனை சமூக சீரழிவுகளுக்கும் , போராட்டங்களுக்கும் , குலச் சண்டைகளுக்கும் ஊக்கியாய் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு கோத்திரத்தில் ஒரு கவிஞன்  பிறந்துவிட்டால் ஊரறிய, உலகறிய விழாக்கோலம் எடுத்தார்கள். இஸ்லாம் வந்த போது நன்மையையும், நல்லொழுக்கத்தையும் தூண்டும் வகையில்  கவிதையை பயன்படுத்த தூண்டியதோடு நல்ல கவிஞர்களை நபியவர்கள் பாராட்டி பொன்மாலை சூடினார்கள்.

இந்த வகையில் அஹ்னபின் கவிதைகளும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த ஒரு முத்துக் குவியல். ஒவ்வொரு ஆண்டும் ராபிதா கலமிய்யாவில் எழுதி வருகின்ற தனது கவிதைகளுக்கு உயிர் வடிவம் கொடுப்பதில் இம்முறை மன்னாரமுது இலக்கியச் சுனை 02 எனும் தலைப்பில் தொகுக்கின்றார். இவ்தொகுப்பில் கவிதைகளோடு சேர்த்து, மொழி பற்றியும் சில கட்டுரைகள், சிறுகதைகள், நூலறிமுகங்கள் சேர்த்திருப்பது மொழியில் அவரது கூடிய ஆர்வத்தை காட்டுகிறது. காலச் சொற் பொருள் மாற்றம், கிளை மொழிகள் என்பன கட்டாயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கட்டுரைகளாகும்.

இத்தோடு மாணவன் அஹ்னப் அவர்கள் பிறமொழிகளிலிருந்து குறிப்பாக அறபிலிருந்து கவிதைகளை தமிழிற்கு கொண்டு வர வேண்டும் என நான் யாசிக்கின்றேன். நவீன காலத்தில் இஸ்லாம் எதிர்கொள்கின்ற சிந்தனை சிக்கல்களை தீர்க்கும் வகையில்  புதுக் கோணங்களில் இன்றும் பல கவிதைத் தொகுதிகளை எங்களுக்கு வழங்குவார் என்பது எமது அசையாத நம்பிக்கை.
மேலும் மாணவன் அஹ்னப் அவர்கள் தனது மேற்படிப்பை “மொழியியல்
(Linguistic)” துறையில் மேற்கொண்டு இந்த நாட்டுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் தன்னாலான பணிகளை மேற்கொள்வார் எனவும், மறைந்து போன “அறபுத்தமிழை” உயிர்பிக்க வழிசெய்வார் எனவும் நான் கனவு காண்கின்றேன். அல்லாஹ் அவரது அனைத்துப் பணிகளையும் அங்கீகரித்து ஈருலகிலும் வெற்றி பெற்றவராக ஆக்கியருள்வாயாக! ஆமீன்.

 அஷ்கர் அரூஸ்
 11.02.2019

No comments:

Post a Comment